பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

35


பொருள்களால் கவிதை சிறப்பது உண்டேனும் பெரும்பாலும் கவிஞர்தம் கவிதைகளாலேயே பொருள்களைச் சிறப்புறச் செய்வர். அவர்தம் கவிதையால் சாகாவரம் பெற்ற உயிர்கள் எத்தனை. எத்தனையோ மேற்கண்ட நாங்கூழ்ப்புழு அவ்வாறே சிறப்புப் பெற்றதன்ருே! எனவே, உள்ளத்தால் தூய கவிஞனது கவிதை, தாழ்ந்த பொருளுக்கும் அமரத்துவம் வழங்கும் அமிர்தம் என்று கொள்ளுதல் வேண்டும்.

கவிதைக்கு வெறுஞ்சொற்கள் அவ்வளவு முக்கியமல்ல. கருத்தும் உள்ளப் பெருக்குமே மிக மிக இன்றியமையாது வேண்டப்படுவன என்பதை மேலே கண்டோம். இதைக் கொண்டு ஒரு சிலர், கவிதைக்குச் சொல்லே தேவையில்லை என எண்ணிவிட்டால், தவறு உண்டாகும் என்று எண்ணுகின்றேன். கவிதைக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பை அறியத்தான் வேண்டும்.

கவிதை முன்னா சொல் முன்னா என்று ஆராய்வார் ஒரு சாரார். சொல் மனிதன் வளர்ச்சிப் பாதையில் ஒரு மைல் கல். ஆனல், அவன் அக்கல்லைக் கடப்பதன் முன்னமே பல கற்களைக் கடந்து வந்திருக்கிருன்: மொழி, மனிதன் உள்ளக் கருத்தை மற்றவர்களுக்கு உணர்த்தப் பயன்படும் ஒரு கருவியாகும். ஆனால், மனிதன் தோன்றியதும் அவனுடன் அவன் வழக்கத்திலுள்ள மொழியும் தோன்றிற்று என்று ஆராய்ச்சியாளர் கூற முடியாது. மனிதன் தன் மொழியை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழித்துத்தான் உருவாக்கிக் கொண்டிருப்பான். அந்த மொழியும் ஒரு நிலையில் நில்லாது. காலம் செல்லச் செல்லச் சிதைந்தும் மாறியும் திரிந்தும் வந்துகொண்டுதானே இருக்கிறது? ஆனால், அத்தகைய ஒரு மொழி உண்டாவதற்கு முன்னாலும் அவனது உள்ளக் கருத்தை மற்றவர்களுக்கு உணர்த்திக்கொண்டுதானே இருந்திருக்கவேண்டும்.

இன்றும் நம்மிடை வாய்ப்பேச்சற்ற ஊமையர் பலரைக் காண்கின்றோம். அவர்கள் பேச முடியாத காரணத்தால் மெளனிகளாய் வாழ்கின்றார்கள். எனினும், அவர்கள்