பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கவிதையும் வாழ்க்கையும்



"ஒஓ நாங்கூழ்ப் புழுவே!
உன்பாடு ஓவாப் பாடே:
உழைப்போர் உழைப்பின் உழுவோர் தொழில்மிகும்;
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ;
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை!
விடுத்தனை இதற்கா எடுத்தஉன் யாக்கை!
இப்புற் பயிர்நீ இங்ங்ணம் உழாயேல்
எப்படி யுண்டாம்?"

என்று அந்த நாங்கூழ்ப்புழுவை நோக்கி அவர் கேட்கும் கேள்வியிலேதான் எத்துணைச் சிறந்த கவியுள்ளம் காட்சி அளிக்கின்றது! அனைவரும் அற்பமெனக் கருதும் அந்த நாங்கூழ்ப்புழு உழவர்களுக்கெல்லாம் வேந்தாகவன்றோ அக்கவிஞர் கண்ணுக்குக் காட்சி அளிக்கின்றது! அது மட்டுமா? ‘விடுத்தனை இதற்கா எடுத்த உன் யாக்கை’ என்று, அது தன் வாழ்வையே அர்ப்பணித்துக் தியாகத் தீயில் குதித்ததாகவன்றோ ஆசிரியரின் கவியுள்ளம் எண்ணுகின்றது! நாம் நாள்தோறும் பார்த்துப் பார்த்து மிதித்துச் செல்லும் அதே நாங்கூழ்ப்புழுவே, கவிஞர் சுந்தரம் பிள்ளையின் கண்ணிலும் பட்டது. ஆனால், அவர் உள்ளம் கவியுள்ள மன்றோ! அதனாலே அவர் உள்ளம் கற்பனையில் துள்ளிற்று: அதன்வழியே பல உண்மைகளைக் கண்டது; கண்டதைக் கவியாக வாரி வழங்கிற்று. இதுவே கவிதையை உலகுக்கு அளிக்கும் உயர்ந்த நெறியாகும். உலகில் பல பொருள்கள் கவிஞர்களாலேயே ஏற்றம் பெறுகின்றன. மக்களால் மதிக்கத் தகாத பொருள்கள்கூடக் கவிஞர்கள் நாவில் சிறந்து நலமுறுகின்றன. சொற்புலவர் வாக்குக்கு ஏங்கிக் கிடந்த பழந்தமிழ் நாட்டுப் புரவலர்களை நாம் மறக்க முடியாதே! புலவர் பாடும் புகழே தன் வாழ்வின் இலட்சியமாகக் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை அறியாதார் யார்? இவ்வாறு பெருநில மன்னரும், பிறவியிலே கடைப்பட்ட பொருள்களும் புலவர்தம் கவிதைகளால் பொலிவுற்று என்றும் வாழக் காண்கிறோம்,