பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையும் கவிஞனும்

33


ஒவ்வோர் உண்மையை உணர்த்துகின்றது. செல்வத்தில் சிறந்தோர் ஒருபக்கம் சரிந்து வீழ்கின்றனர். வறியவர் ஒரு பக்கம் உயர்ந்து ஓங்குகின்றனர். மாய்தலும் பிறத்தலும் மாநிலத்தின் அன்றாட நிகழ்ச்சிகளே. இவற்றையெல்லாம் அறியாதாரும் அறிந்துகொள்ளும்படி சந்திரன் எல்லோரும் காணும் வகையில் வானவீதியில் உலவிவருகிருன் என்கின்றான் அவன்.

‘தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக் காட்டித்
திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்’ (புறம்)

என்று அப்புலவன் கூறும்போது அவனது கவியுள்ளத்தை நாம் வியவாதிருக்க முடியுமா: கவிதை உள்ளத்தைத் தொடுவது என்பது இவ்வடிகளால் எப்படி விளங்குகின்றது?

உயர்ந்த பொருள்களாகிய வானத்துக் கதிரவனிடத்திலும், வையத்து வெள்ளத்திலும் மாத்திரம், இத்தகைய உயர்ந்த கருத்துக்களைக் கவிஞர்கள் கண்டார்கள் என்று சொல்ல முடியாது. சாதாரணப் பொருள்களும் கவிஞன் கண்களுக்கு உயர்ந்த அறமுறைக்கும் ஞானசிரியராகக் காட்சியளிக்கும். ஊரும் எறும்பும், மண்கிளறும் நாங்கூழ்ப் புழுவும். பறக்கும் காக்கையும், வெட்டுண்டு தளிர்க்கும் மரமுங்கூடக் கவிஞர்களின் கண்களுக்குப் புதுப்புதுப் பொருள்க்ளை உணர்த்திக் கொண்டேதான் இருக்கும். நாங்கூழ்ப் புழுவினைக் கண்டு தம்மை மறந்த நிலையில், கவிஞர் சுந்தரம் பிள்ளை அவர்கள், அப்புழுவினையே முன் நிறுத்தி எவ்வளவு அழகாகத் தம் மனேன்மணியத்தில் பாடியிருக்கின்ருர்! அந்தப் புழு அவர்தம் கவிக் கண்களுக்கு எத்தனை எத்தனை உண்மைகளை உணர்த்துகின்றது! அதன் பாட்டிலும் பண்பிலும் அவர் எவ்வளவு மூழ்கியிருக்கின்றார்! அவர் நாங்கூழ்ப் புழுவினைத் தியாகியாகவன்றோ காண்கின்றார்! அதன் வாழ்வையே. மற்றவர்பொருட்டு அர்ப்பணித்ததாக அன்றோ அவருக்கு அது காட்சியளிக்கின்றது!