பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

7. கம்பரும் சேக்கிழாரும்



டைக்கால இலக்கியங்களிலே பலப்பல காலத்தால் கொள்ளப்பட்டும் தள்ளப்பட்டும் நிற்கின்றன. கவிதைத் தொகுப்பின் காவியங்கள் பல அந்த இடைக்காலத்தில் தோன்றலாயின. அக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களையும் வாழ்க்கையையும் விளக்கும் காவியங்களுடன், பிற மொழியிலேயிருந்து மொழிபெயர்க்கும் காவியங்களும் பல தோன்றலாயின. அரசர் மூலமும் பிற ஆணையாளர் வழியும் சங்ககாலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் வடமொழி தலைதூக்கி ஓங்கலாயிற்று. சிலகாலம் தமிழ்நாட்டில் வடமொழி பயின்றால்தான் சிறந்த புலவன் ஆகலாம் என்றும் அன்றேல் அவன் கல்வியால் சிறப்பில்லை என்றும் கருதும் அளவுக்குக் காலம் மாறி நின்றது. அக்காலத்தில் தமிழினும் வடமொழியே நாட்டில் ஆதிக்கம் செலுத்திற்று எனலாம். என்றாலும், அரசரும் பிற ஆணையாளரும் வடமொழியை உயர்நிலைக்குக் கொண்டுவர நினைத்த போதிலும், சாதாரண மக்கள் தங்கள் வாழ்வுக்குப் புறம்பான அம் மொழியைப் போற்றி வளர்க்க விரும்பவில்லை. அந்தப் பொதுமக்களது எண்ணமும் செயலுமே இன்றுவரை இரு மொழிகளையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. கடவுளைப் பாடின அடியவர்கள், 'ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்,' என்றும், ‘ஆரியமும் தீந்தமிழும் ஆயினன் காண்,’ என்றும், ‘இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்,’ என்றும் பாடி இரண்டையும் தமிழ்மக்கள் இடத்தில்—தமிழ் வாழ்வின் இடையில்—கலக்கும் வகையில் அமைத்த போதிலும், பொது மக்கள் மட்டும் தம் வாழ்வில் அம்மொழியை அதிகமாக ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதனாலயே, தமிழ் இன்றும் தனித்தியங்கும் தன்மை பெற்றுள்ளது.