பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

கவிதையும் வாழ்க்கையும்


யிடையே சமரசஞானம் விளங்குதல் கண்கூடு, அவர் பாடல்களை அருட்பா எனலாகாது என்று வாதப் பிரதி வாதங்களும், வழக்குக்களுங்கூட நடைபெற்ற போதிலும், அவர்தம் சமரசப் பாடல்கள் நாட்டில் இன்று அதிகமாக உலவத் தலைப்பட்டு விட்டன. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்!' என்று உயிர்த்தோற்றத் திறனை அவர் உணர்ந்து கூறுவது வாழ்க்கை நூலாக வாழாமல் போகுமா? ஓரறிவு உயிர்க்கும் வாட்டம் உண்டானல் பொறாது செயலாற்றிய பழம்பெருந் தமிழ் மன்னன் பாரியின் நிலையிலன்றே அவர் இரக்க உள்ளம் இயங்குகின்றது! பயிர் வாடினல் அவர் வாடுவானேன்? ஆம்; அதுவும் ஓர் உயிர் அன்றே! அது வாடுவதும் ஆறறிவுடைய மனிதன் வாடுவதும் உயிர் அமைப்பின் வழி ஒன்றுதானே? இந்த உணர்வுடைய பாடல் வாழாது போகுமோ? இது போன்ற சமரசக் கருத்துக்கள் அவர்தம் பாடல்களில் எத்தனையோ உள்ளன, அவர் இறைவனை வேண்டும்போது 'ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்ற வேண்டுகோளைத்தான் முன் வைத்து வேண்டுகின்றார். உலகில் சமரச சன்மார்க்கம் நிலவ வேண்டும் என்பதே அவர் ஆசை. சாதியாலும் சமயத்தாலும் பிறவற்றாலும் பிளவுபட்டு நிற்கும் சமுதாயத்தை நோக்கி நோக்கி நைந்து நைந்து அவர் பாடிய பாடல்கள் பல. நாட்டில் நடமாடும் 'கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக' வேண்டுமென்று அவர் வெள்ளை உள்ளமும் விரும்பிற்று. அவர் கடவுளை அருட்பெருஞ் சோதியாகவே கண்டார். அவர் காட்சியில் உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றாகவே தோன்றிக் காட்சியளித்தன. கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களைக் கூப்பிட்டு கூப்பிட்டு அவர் கூறும் அற உரைகள் எல்லா உயிர்க்கும் ஏற்றனவாய் அமைந்துள்ளன: சிறந்துள்ளன. எனவே, அவர் பாடல்கள் ஒரு சமயத்தைச் சார்ந்தனவாக அமையினும் மக்கள் வாழ்க்கையையும் வளத்தையும் செம்மை யான முறையில் போற்றியும் பாராட்டியும் சிறக்கச் செய்தமையின், எதிர்ப்புக்களே யெல்லாம் வென்று, 'அருட்பா' வாகவே அவை வாழ்கின்றன எனலாம்.