பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

47


தொல்காப்பியச் செய்யுள் இயலிலும், பின் வந்த யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூல்களிலும் செய்யுளுக்கெனத் தனித்தனியே இலக்கணங்கள் வகுத்துள்ளனர். அந்த இலக்கண வரம்பில் மேற்கண்ட வண்டிக்காரன் தெம்மாங்கும் பிற பாடல்களும் இடம்பெற வழி இல்லை என்பர் இலக்கண நூலோர். ‘செய்யுள் தாமே மெய்பெற விரிப்பின், பாவே பாவினம் என இரண்டாகும்’ என்று யாப்பருங்கல ஆசிரியர் செய்யுளை வரையறுத்து விடுகின்றார். பாவெனவும் பாவினம் எனவும் செய்யுள் இரண்டு வகையிலேதான் அடங்க வேண்டும் என்பது அவர் துணிபு. தொல்காப்பியர் செய்யுள் இயலிலே செய்யுளுக்கு உறுப்பாவன இவை இவை என முதற்குத்திரத்தால் விளக்கி, அவற்றையெல்லாம் அந்த இயல் முழுதும் விளக்கிக் கொண்டே செல்கின்றார்; இறுதியாக,

"செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
வருவன வெனினும் வந்தவற் றியலால்
திரியின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே." (545)

என்று ஒரு புறநடையையும் காட்டியுள்ளர். இருநூற்று முப்பத்து நான்கு சூத்திரங்களில் செய்யுளின் இலக்கணங்களையெல்லாம் கூறிவந்த தொல்காப்பியனார்க்கு, அவ்வளவு கூறியும் செய்யுள் இலக்கணம் அவற்றுள் அடக்கக்கூடிய ஒன்று அன்று என்பது புலப்பட்டிருக்க வேண்டும். பலவகை உறுப்பினங்களையும் அழகுகளையும் கூறி, அவ்வவற்றின் இயல்புகளையும் வரிசையாகக் காட்டிய அவர், இறுதியில் செய்யுளை இவ்வாறு வரிப் புனைந்த சட்டங்களுக்குள் எப்படி மாட்டி நிறுத்த முடியும் என்று எண்ணியிருப்பார்; எனவே தான், இந்த இறுதிச் சூத்திரமாகிய புறநடையையும் உடன் கூறவேண்டிய அவசியத்தைக் கண்டார். புறநடையில் அவர் கூறுவன யாவை?

‘மேலே செய்யுள் இலக்கணத்தில் கூறிய அனைத்தும் தவறின போன்று சில பாடல்கள் அமையினும், அவற்றையும்