பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதையின் வகைகள்

49


நாள்தோறும் வளர்ந்துகொண்டே செல்கின்றது. இம் முறை தான் செய்யுள் வழக்கு முறைக்கு மட்டுமன்றி, எல்லா வாழ்க்கை நெறிக்குமே பொருந்துவதாகும். அவை பற்றியெல்லாம் அறிஞர் கூறியிருப்பன நோக்கின் நன்கு புலனாகும்.

இச் செய்யுள்களைப் பாவெனவும் பாவினமெனவும் பிரித்தார்கள் என்பதைக் கண்டோம். அவற்றைப் பற்றியும் ஒரு சிறிது அறிதல் நலம் பயப்பதாகும். அவ்வகைப் பாவினத்துள்ளும் பலப்புல தமிழ்க் கவிதைகள் உருவாகி உள்ளன. எனவே, அவற்றைப் பற்றி அறிதலும் கவிதைக் கூறுபாடுகளைக் காண்பதாகும்." காலத்தால் பின்னர் வந்த யாப்பருங்கல விருத்தியும், காரிகையும் பெரும்பாலும் தொல்காப்பியத்தின் அடி ஒட்டியே செல்லுகின்றமையினாலும், தொல்காப்பியமே தொன்மையான இலக்கண நூலானமையாலும், அதிற்காணும் பாகுபாடுகளை உணர்வதே போது மானதாகும்.

தமிழில் நால்வகைப் பாக்களே முக்கியமாகப் பேசப்படுவன. அவை வெண்பாவும், ஆசிரியமும், கலிப்பாவும், வஞ்சிப்பாவும் ஆம். அவைகளைச் சார்ந்து அவற்றின் இனமாகப் பலப்பல காலப்போக்கில் தமிழில் இடம் பெறலாயின. சங்க கால இலக்கியங்களையும், பிற்கால இலக்கியங்களையும் ஒப்பு நோக்கின், இவ்வுண்மை நன்கு புலப்படும். பிற்காலத்தே தோன்றிய பல்வகைப் பாவினங்களையும் உள்ளடக்கியே யாப்பருங்கலம் இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியத்தில் நால்வகைப் பர்க்களையும் அவை காணும் பொருள்களையும்,


‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற் றென்ப பாவகை விரியே.’ (411)

எனவும்,

‘அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப’ (412)