பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கவிதையும் வாழ்க்கையும்


எனவும் விளங்கக் கூறியுள்ளார் ஆசிரியர். மேலும், வஞ்சியும் கலியும் ஆராய்ந்தால், அவையும் வெண்பா ஆசிரியம் என்ற இரண்டினுள்ளேயே அடங்கும் என்பது,

‘பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. (413)

எனவும்,


‘ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
வெண்பா நடைத்தே கலிஎன மொழிப. (414)

எனவும் கூறுதலால் விளங்கும். எனவே, தமிழ்க் கவிதைகள் —செய்யுள்கள்—முதன் முதலாக வெண்பாவிலும் ஆசிரியப் பாவிலுந்தான் இயங்கி வந்தன என்பது ஒருதலை. பின்னர்க் காலம் செல்லச் செல்ல, அவை நான்காகி, பின்னர் அந்நான்கும் பல்வேறுவகை இனங்களாய்ப் பரவி, எத்தனையோ வகையில் செய்யுள் நிலை விரிந்துவிட்டது என்பதும் இன்று நாம் காண்பதொன்று. இக் காலத்தில் அந்த யாப்பிலக்கண எல்லைக்கு அப்பாலும் பல பாடல்கள் விரிவடைந்துள்ளன. அவற்றின் சொல்லும் பொருளும் அறிந்து, கவிதைப் பண்பு கலந்திருக்கும் கவின் கண்டு, அவற்றையும் தொல்காப்பியர் வரைந்த புறநடை யிலக்கணத்தின்வழிப் பாட்டெனவே கொள்ளல். வேண்டும்.

தொல்காப்பியத்தில், பா வகையில் இந்த நால்வகைப் பிரிவினை மட்டும் கூறப்படுவதோடல்லாது, பரிபாடல் முதலிய பிரிவினைகளும், பாக்களின் சிலச்சில பிரிவினைகளும் பேசப்படுகின்றன. அவற்றோடு பொருள் நலத்தால் பாகுபடுத்தப் பட்டு, விளக்கும் பொருளின் அடிப்படையில் அமையும் செவியறிவுறூஉ, கைக்கிளை, புறநிலை வாழ்த்து முதலிய வகைப் படுத்தப்பெறும் பாடல்களும் பேசப் பெறுகின்றன. செய்யுளியலில் வெறும் பாவின் இலக்கணம் கூறவேண்டுமாயினும் அப்பாக்கள் நாம் முன் கூறியபடி செம்மைப் பொருள்வழிச் செல்லாவாயின் சிறவா என்பதை உளத்துக் கொண்டேதான்