பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கவிதையும் வாழ்க்கையும்


மாற்றார்மேல் படையெடுத்துச் செல்கின்றான் மன்னன். அவ்வாறு படைகொண்டு மாற்றாரைச் சாடப் புறப்படும் நிலையினை, ‘வஞ்சி’ என்று விளக்குகின்றார் ஆசிரியர்; அதை ஒரு படலமாக்கிப் பல துறைகளை அதில் புகுத்துகின்றார். அத்துறை ஒவ்வொன்றிற்கும் தனித்தனிப் பெயர் உண்டு. அவ்வப் பெயரால் அக்கருத்தமைந்த பாடல்களை அமைத்துப் பாடுவர் புலவர் என அறிகின்றோம். ஒன்றை உதாரணமாகக் காண்போம். போர்க்களத்து மன்னன் வாள் ஒச்சிய சிறப்பை ஒரு புலவன் பாடுகின்றான் என்று கொண்டால், அப் பாட்டிற்குக் ‘கொற்ற வஞ்சி’ என்னும் பெயர் உரித்தாகும்.


“வையகம் வணங்க வாள்ஓச் சினன்எனச்
செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று”

என்பது அத்துறையின் இலக்கணம். எனவே, தமிழ் இலக்கியத்தில் இந்தக் கருத்தமைந்த பாடல் எங்கு வரினும், அதன் துறை ‘கொற்ற வஞ்சி’ என்று கொள்ளவேண்டும் என்பர்.

இன்னும் இரண்டொன்று காணல் நலம் பயப்பதாகும். காஞ்சி' என்பது நிலையாமையைக் குறிக்கும் தொடர். வெண்பா மாலையில் எதிர் ஊன்றல் ‘காஞ்சி’ என்றபடி, பகைவரை மதிலிடத்து எதிர்த்து நின்று போரிடும் திறனை விளக்கும் பகுதியாய் இக் காஞ்சி அமைகின்றது. அந்த எதிர்ப்புப் பணியில் வீரர் பலர் கலந்து தொண்டாற்றியிருப்பர்: பலர் பட்டிருப்பர். ஒரு வீரன் மனைவி, போரில் வீழ்ந்த தன் கணவனைத் தேடிக்கொண்டு வந்து, அவனுடன் கற்புக்கடம் பூண்டு கனைஎரி மூழ்க முன்னிற்பாள். அவள் கற்பு நிலையை வழியிடைச் செல்வோர் காணக்கூடும். கண்டவர் வாய்மூடி மெளனியராய்ச் செல்வரோ? அவர் அந்நிலைபற்றி ஏதேனும் சொல்லியிருப்பர். அவ்வாறு சொல்லும் நிலையை, ‘ஆஞ்சிக் காஞ்சி’ என்ற பெயரால் வழங்குகின்றார் புலவர். அதன் விளக்கம்,

"காதற் கணவனொடு கனையெரி மூழ்கும்
மாதர் மெல்லியல் மலிபுரைத் தன்று”