பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கவிதையும் வாழ்க்கையும்


கவிதைகளைப் பாடப் பயன்படுத்தாமல், வெற்றுப் பாடல்கள் பாடி வீணே மறைந்தனர் புலவர் பலர். அவர்கள் பாடிய தனிப் பாடல்கள் சில இக் காலத்திலும் தமிழ் நாட்டில் ஒரளவு, வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எனினும், கவிதைப் பண்பாட்டு நிலையில் அவை அத்துணைச் சிறந்தனவாய் நின்று அறிஞர் பெருமக்களால் போற்றப்படாது ஒதுக்கப்பட்டன என்றுதான் கூறவேண்டும். எப்படியாயினும், நால்வகைக் கவிகளுள் முதலிடம் பெறும் இவ்வாசுகவிகள் தமிழ்க் கவிதைச் சோலையில் காப்பாற்றப்பட வேண்டிய மரங்களேயாம்!

இனி, மதுர் கவி என்பான், இனிமை நலம் தோன்றப் பாடுபவன் என்பர். மதுரம் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டு. அது கொண்டே இனிமையாகப் பாடுபவன் எனக் கொள்ளலாம். எனினும், கவிகளென்றாலே இனிமை பொருந்தியனவாகத்தானே இருக்க வேண்டும்? மதுரகவி என்று தனியாகப் பிரிந்தமையினலே, மற்றைய ஆசு' சித்திர, வித்தார கவிகள் இனிமையற்றனவாகவும் இருக்கலாமோ!' என்ற ஐயம் எழுதல் இயல்பே. ஆயினும், ஆய்ந்து பார்ப்பின், அந்த முடிவு கொள்ள இயலாது. இனிமை அற்றன கவிதை என்னும் பெயருக்கே தகுதியற்றுக் கழிந்து ஒழிந்து மறைந்தவையல்லவோ!

வைணவ சமயத்திலே சிறந்த அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வாருள்ளே மதுரகவி ஆழ்வாரும் ஒருவர். அவர் மதுரகவி ஆழ்வார் என்றால், மற்றப் பதினோர் ஆழ்வாரும் மதுரமற்ற வெற்றுப் பாடல்களையா இறைவனை நோக்கிப் பாடினார்கள்? அவர்தம் வெற்றுப் பாடலுக்கா அவ்விறைவனும் இரங்கி அருள் புரிந்தான்? மற்றவர் ஒருவேளை அறியாது ஆமென்று சொல்லலாம். ஆனால், வைணவர்கள் அவ்வாறு சொல்வார்களோ? உண்மையில் அனைவர் 'கவிதைகளும் அழகும் மதுரமும் பொருந்தியவைதாமே? ‘கோதை தமிழ்’ என்றே சிறப்புப் பெயர் பெறும் ஆண்டாள் பாடல்கள், மதுரப் பாடல்கள் அல்லவோ? புளியமரத்தின் கீழ் இருந்து, அருள் ஞானம் பெற்ற நம்மாழ் வாரின் திருவாய் மொழிக்ள் மதுரம், கனிந்தன அல்லவோ?