பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கவிதையும் வாழ்க்கையும்


சிறப்புக்கள் அவர்களைப்பற்றிப் புலவர்கள் பாடிக் கவிதைகள் புனைந்துள்ளனர்? இதலைன்றோ மணிமுடி தரித்த பாண்டிய மன்னன்—பகைவர்களுக்குப் புறமுதுகிடாத புரவலன்யாருக்கும் பின்னடையாத வெற்றி வீரன்—பாண்டியன் நெடுஞ்செழியன்—ஒன்றிற்கு மட்டும் அஞ்சி நின்றான்? ஆம்!, அவன் புலவர் பழிச்சொல்லுக்கு அஞ்சினான். புலவர் பழிப்பாராயின், அவனும் அவன் ஊரும் நாடும் உலக முள்ளளவும் இகழ்ச்சியை ஏற்று அல்லவோ வாழ வேண்டி வரும்? புலவர் பாடும் புகழுக்கு ஏங்கி இருந்த மன்னர் எத்தனை பேர்! புலவர் பாடும் புகழைப் பெற்றவர், இம்மையில் மட்டுமன்றி, மறுமையிலும் நல்ல வகையில் வீடெய்துவார்கள் என்றும் கூறியுள்ளனரே!

‘புலவர் பாடும் புகழோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்பதம் செய்வினை முடித்து’

என்ற புறநானூற்றுச் செய்யுள் அவ்வுண்மையைத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றதே! மேலே கண்ட பாண்டியன்—தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்—புலவர் பாடாத ஒன்றையே பழியாகக் கருதினன் என்பதை அவன் வாய்ப்பாட்டே நமக்கு நினைவூட்டுகின்றதே!

மாற்றாரைப் போரில் வென்று வெற்றிகொண்டு, நாட்டில் நலிவு உண்டாகாமல் காக்கவேண்டுவது மன்னவன் பொறுப்பு. நெடுஞ்செழியன் வயதில் இளையவன் என்று மாற்றார் பலரும் திரண்டு வந்தனர் போலும் அதை அறிந்த வீரன் நெடுஞ்செழியன் பின்னடையவில்லை. எதிர்த்தவர் அனைவரையும் ஒருசேரத் தோற்கடிக்கப் புறப்படுகிறான்; அப்போது வஞ்சினங் கூறுகின்றான். அவ்வஞ்சினத்தின் இடையிலேதான் அவன், புலவர் தம் கவிதைப் பொன்மொழிக்குத் தந்துள்ள ஏற்றமும் புலப்படுகின்றது. ‘மாற்றாரை ஒருங்கு அகப்படுத்தி வெற்றி கொள்ளவில்லையானல், என்னை இன்னின்ன பழி சேரட்டும்’ என்றவஞ்சினம் அவன் வாய் வழி வெடித்து வெளி வருகின்றது.