பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கவிதையும் வாழ்க்கையும்


மானிடம் தூதனுப்பினன். அவரும் காடும் நாடும் கடந்து வந்து, காஞ்சி நகர் சார்ந்து, தொண்டைமானைக் கண்டார்; பின்பு சிறிது சிறிதாக அவன. மனம் மாறச் செய்திருப்பார்; கடைசியில் தொண்டைமானைக் காட்டிலும் அதிகமான் பெரும்படை வைத்திருப்பவன் என்றும், அவன் போர்த்திறன் மிக்கவன் என்றும், அவனை வெல்வது எளிதன்று என்றும் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் எடுத்துக் காட்டிப் போரை நிறுத்தி விட்டார். சிலர் கருதுவது போன்று, ‘இவ்வே, பீலி அணிந்து’ என்ற ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் அதிகமானைச் சிறப்பித்து, தொண்டைமானைத் தாழ்த்து முகத்தானே இழிவுபடுத்தியது என்றும், அதிகமானிடம் தாம் கொண்ட அளவற்ற அன்பே ஔவையாரை அவ்வாறு பாட வைத்தது என்றும் கொண்டாலும், அதலுைம் ஔவையாரின் குறிக்கோள் நல்லதாய் அமைந்து, பொதுவாழ்வில் வெற்றியைத் தேடித் தந்தது என்பதை மறுக்க முடியாது. போர் நடந்து இருவருள் ஒருவர் வெற்றி பெற்றாலும் இரண்டு நாடுகளும் எவ்வளவு அல்லலுற்று இருக்க வேண்டும்! அந்த அவல நிலையை நாட்டில் இல்லையாக்கி அமைதியை நிலைநாட்டிய ஔவையார், பொது வாழ்வில் வெற்றி கண்ட புலவரல்லரோ!

வெண்ணிக் குயத்தியார் என்ற மற்றொரு பெண்பாற் புலவரைக் காண்போம். சோழன் கரிகாற் பெருவளத்தான் சேரமானோடு வெருவரு வெண்ணிப் பறந்தலையிலே போரிட்டான் சேரமான் சிறக்கப்போரிட்டு வெற்றி வாயிலிலே நின்றான் எனினும், அந்த நிலையில் ஓரம்பு அவன் மார்பிற் பட்டு, முதுகு வழிப் புறம் போயிற்று. அதனல், முதுகில் உண்டான புண்ணை, முதுகிலேயே அம்பு பட்டதால் உண்டான புறப்புண் எனக் கருதி விட்டான். வீரனுக்கு அதனினும் கொடிய அவமானம் உண்டோ! முதுகில் அம்புபட்டுப் பெறும் புண்ணே அவமானத்தின் சின்னம் எனக் கருதி வடக்கிருப்பர் தமிழ் மன்னர். சேரலாதனும் அவ்வாறே வடக்கிருக்கத் துணிந்தான். அவன் நிலை கண்டு நைந்து, அவன் படைகள் பின்னடைந்திருக்கும். இச்சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றிகண்டு அதனால்