பக்கம்:கவிதையும் வாழ்க்கையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் வெற்றி

97


சிறப்படைந்தான் கரிகாலன். வெற்றியோடு அப்படியே தலைநகருக்குத் திரும்பியிருக்கலாம். ஆயினும், அந்த இடத்திலேயே வெற்றி விழாக் கொண்டாட நினைத்தான் போலும்! இது அருவருக்கத்தக்க செயலன்றோ! மாற்றான் புறப்புண் நாணி வடக்கிருந்த சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு, வெற்றிவிழாக் கொண்டாடுவது சிறப்பல்லவே! ஆமாம்! ஆனால், அதை யார் அரசனுக்குச் சொல்லுவர்? அவன் நாட்டில் அதன் விழாவை எதிர்த்துப் பேச யாரால் குடியும்? முடிந் தது ஒரு கவிஞரால்: அதுவும் பெண்பாற் கவிஞரால்! அவ்வூரில் வாழ்ந்த குயத்தியார்தாம் அவர். அவர் இயற்பெயர் எதுவோ அறியோம்! அவர் குலம் ஒரு வேளை குயவர் குலமோ என ஐயப்பட இடமுண்டு. அதுபற்றி நாம் கவலையுற வேண்டா. அவ்வெண்ணிக் குயத்தியார் கரிகாலன் முன்வந்து, அவன் விழாக் கொண்டாடுவது தகுதியற்றதென்பதையும், அவனினும் புறப்புண் நாணி வடக்கிருந்த சேரன் நல்லவன் என்பதையும் எடுத்துக்கூறிக் காட்டிவிட்டார். அவர் பாடல் இதுதான்:

‘நனியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் கல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக்கிருந் தோனே!’ (புறம். 66)

இப்பாட்டில் நின் ஆற்றல் தோன்ற வென்றோய்!” என்று சுட்டி,அவ்வாறு வெல்லவில்லை; சேரன் வடக்கிருந்ததாலேயே வென்றான், என்பதைக் குறித்து, கரிகாலனினும் சேரன மேம்பட்டவனாக்கி, போர்க் களிப்பில் மறந்து விழாக் கொண்டாடிய கரிகாலனை உணர்வுபெறச் செய்த சிறப்பு விளங்குகிறதன்றோ! இக்கவிஞர் வெற்றி கரிகாலன் வெற்றியினும் மேம்பட்ட ஒன்று என்பதை மறுப்பார் யார்?