பக்கம்:கவிதை உருவாக்கம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒரு கவிதை உருவாகிறது பதிப்புச் செம்மல், தமிழவேள் ச.மெய்யப்பன் ஒரு மொழிக்கு வளம் சேர்ப்பன, அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களே. தமிழ்மொழி தொன்மையானது. அதன் இலக்கிய வளம், அளவிடற்கரியது. சங்ககாலம் தொடங்கி இன்று வரை புதிய புதிய வடிவங்களைப் பெற்று, தமிழ் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நாளும் வளர்ந்து வருகிறது. கபிலர் முதல் கண்ணதாசன் வரை. வன்பரணர் முதல் வைரமுத்து வரை நாளும் புதிய வடிவங்களைப் பெற்றுக் கவிதை உருவாக்கப் பெற்று வருகிறது. தமிழ்ப் படைப்பாளிகளின் வளமான கற்பனைகளும் வற்றாத கருத்துக்களும் சீரிய வடிவமைப்புத் திறனும் தமிழ்க் கவிதைகளுக்கு நிலைபேறு அளித்து, தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் காத்து வருகின்றன. மொழி உருவாக்கம், இலக்கண உருவாக்கம் என்பன போல் கவிதை உருவாக்கமும் இன்று அறிஞர்களால் ஆராயப் பெறுகிறது. ஒரு கவிதை தோன்றுவதற்குரிய காலம், சூழல், களம், கவிஞனின் அறிவாற்றல், படைப்பாற்றல், ஆளுமை அவன் படைப்புக்கு வலிமை சேர்க்கின்றன. கவிஞன் நெஞ்சில் கருக் கொண்டு, சிந்தையில் கிடந்து ஊறி செவ்விய இலக்கிய வடிவம் பெறுகிறது. கவிதை சிறக்க பல்வகைக் காரணிகள் அடிப்படையாக அமைகின்றன. கவிதை வாழ்வு பெறவும், நிலை பெறவும் கவிதையாக்கத்தின் கட்டமைப்பே பெரிதும் துணை செய்கிறது.