பக்கம்:கவிதை உள்ளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிமுகம்



"உங்கள் பழம் பெருமை உன்னிஅப் பேய் விட்டு

நங்கள் இடம்வந்து நல்லவராய் மாறீரோ"

என்று கேட்க அதற்கு இணங்கி ஓரிருவர் உற்று அவனைச் சேர மற்றவர்கள் குலம் கெடுத்த கோடரிக்காம்புகளாய் நின்றிட்ட தன்மையையும் அவ்வாடவன் வாயால் நவில்கின்றார். பொய்க்காரியின் அண்ணனும் அவன் உடன் வந்தவரும் ஆயுதம் பலவும் ஏந்தியிருந்தும் அவர்கள் தமிழ்க்காதலனின் முன் நின்று போர்புரிய மாட்டாமல், நண்ணி உடன் வந்த வரை நட்டாற்றிடை விட்டுத் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கைவிடப்பட்ட சோதரக்கட்கு நல்லறிவு புகட்டி அனுப்பி வைத்துவிட்டுத் தன் தலைவியை நாடித் தலைவன் சென்று தலைவியோடு ஆனந்தத் தழுந்தினன் என்று கவிதையை முடிக்கின்றார்.

நூற்று நாற்பது அடி கொண்ட இந்நிலைமண்டில ஆசிரியப்பா அருமையாகத் தமிழுணர்வு ஊட்டுவதாக அமைந்துள்ளது எனின் மிகையாகாது.

மேலும் இப்பாடல் தமிழை மறந்து பிறமொழி மோகத்தில் சிக்கக் கூடாது என்றும், சிக்கினால் அவதியுற நேரிடும் என்றும் அறிவுறுத்துகின்றது.

'கவிஞன் பிறக்கிறான்; ஆக்கப்படுவதில்லை' என்ற பொருண்மொழிக்கேற்ப நனி சிறந்த கவிதைகள் இயற்றியருளும் ஆசிரியர் தலைசிறந்த கவிஞராகத் திகழ்கிறார். சொல்லழகும் பொருளழகும் பொதுள, கற்பனை யூட்டமும் நடையோட்டமும் பொலிய, கவின் மிக்கு விளங்கும் ஆசிரியர்தம் கவிதைகள் காலத்தை வென்று வாழத்தக்கன எனின், அஃது உண்மை யுரையாய்த் திகழும் என்பது ஒருதலை.

வாழ்க கவிஞர் தமிழ்க் காதல்!
வளர்க அவர்தம் தமிழ்த் தொண்டு!



25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/25&oldid=1389160" இலிருந்து மீள்விக்கப்பட்டது