பக்கம்:கவிதை உள்ளம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளி விடு தூது


எங்கும் நிறைந்து இளநலமாய் வாழ்வுற்றுப்
பொங்கிப் பரந்துள்ள பொன்வளியே -மங்காத

உந்தன் செயலெல்லாம் ஒப்பார் செயலென்று
எந்தன் மனம்உரைக்க எண்ணாதே - பொன்றலிலா

வாழ்க்கை அமைக்கும் வளர்வளியே உன்பெருமை
ஆர்க்கு எடுத்துரைக்க ஆவதுவே - போக்காகச்

செய்கை பலசெய்வாய் செல்வநலம் பெய்வாய்நீ
உய்ய உயிர்ப்பாகி ஓங்கிநிற்பாய் - மெய்வழியில்

உள்ள முழைகளெல்லாம் உன் செயலாய் உள்ள துவால்
மெள்ள நுழைந்தகன்று மேவிநின்றாய் - தெள்ளாத

தீஞ்சுவைசேர் இன்பமிகு தென்றலென வந்திடுவாய்
வாஞ்சனைசேர் காதலர்க்கு வாழ்வளிப்பாய் - ஆங்காலை

உன்னை மறவார் உனது துணைமறவார்
பொன்னனைய மாதர் புறக்கணியார் - இன்னும்கேள்!

தென்றலாய் வந்தநீ செம்மை நலமீந்து
ஒன்றும் பெரும்புயலாய் ஒங்கிடுவாய் - அந்தநிலை

தன்னில் எவரும் தகைக்கமன மற்றிடுவார்
உன்னில் உயர்ந்தவரு முண்டேயோ? - மின்னலுடை

மேகஞ் செலுந்திசையை மீட்டுத் திருப்பியெங்கும்
போகம் பொழிய மழை பெய்விப்பாய் - நீகருதில்

எப்பொருளும் மாளும் எவரும் பலனடைவர்
ஒப்புனக்கு உள்ளார்யார் ஓதிடுவாய் - கற்பகமே

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/36&oldid=1389197" இலிருந்து மீள்விக்கப்பட்டது