பக்கம்:கவிதை உள்ளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க இயேசு நாமம்!

கடல்சூழ்ந்த நிலவுலகம் கவினப் போற்றக்
காணரிய பெத்தலகேம் ஊரி லுற்ற
அடல்சேர்ந்த மரியம்மை உதரத் தூறி
அன்புநிலை நற்குழவி யாக வந்தே
மடஞ்சேர்ந்த ஏரோது கொடுமை யெண்ணி
மரக்கலத்தே எகிப்துநா டடைந்துப் பின்னை
நடஞ்சேர்ந்த பருவமது எய்தித் தாய்பின்
நல்லார் வாழ் இஸ்ரவேல் நடந்தாய் வாழி!

யோவானை யெதிர்கண்டு யோகு கூறி
யேவர்க்கு உயர்நிலையை யெய்திப் பின்னைத்
தேவார்ந்த தேவனது மகனே யாகித்
திண்ணியதோர் குன்றின்மேல் திகழ்ந்து தோன்றி
நாவார்ந்த உபதேச மொழியைச் சாற்றி
நாடனைத்தும் நின்புகழே நடக்கச் செய்து
மேவார்ந்த தலைவனென நின்று என்றும்
மிக்கோனாய் மிளிர்ந்திட்ட இயேசு வாழி!

ஊரிடத்தும் நாடிடத்தும் உற்ற பல்லோர்
உடற்றியதீ நோய்களையே உதறித் தள்ளிப்
யாரிடத்தும் இறையருளே பரந்து நிற்கப்
பரஞானங் கொடுத்து தவும் பரம வள்ளால்!
சீருறவே படகிருந்து சீட ருக்காய்ச்
செயற்கரிய செயல்காட்டித் தெய்வ அன்பே
யாரிடத்தும் நிலைநிற்க உழைத்து நின்று

யாண்டும் அருள்நிலை விளக்கும் இயேசு வாழி!

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிதை_உள்ளம்.pdf/78&oldid=1389205" இலிருந்து மீள்விக்கப்பட்டது