உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

நாகங்கள் புதற்புற்று நாடிச் செல்ல,
நலித்தஇருள் நலிந்திடநா னிலத்துள் நாளும்
மோகங்கொள் மடமகளி ரணைப்பை நீக்கி
முகமலர்ந்து தொழில்முயன்று முடிக்க வேநீர்
ஏகுங்கள் ஏகுங்கள் எனவே காலை
எழில்தருக்கள் மீதுதுயில் நீத்தெ ழுந்த
காகங்கள் கரையுமொலி கேட்டு வானில்
கதிரவனும் கவினுறக்கண் மலர்ந்தா னன்றே.

'சருக்கரையும் பசும்பாலும் கனியும் தேனும்
சப்பையிவை எனச்செப்பித் துப்பு மாறே,
அருக்கனென விளக்கஞ்செய்திடவே நானும்
அருந்தமிழில் கவிதைசெயக் கண்ணை மூடி
ஒருக்களித்து படுத்திருந்தேன்; எனைய றந்தவ்
வொப்புவமை யற்றஇளங் காலைப் பொழுதில்
தெருக்கதவைத் தட்டுகிறாள் அவளும் வந்தே
தினந்தோறும் போலன்றும் திடுதி டென்றே.

"சே சே சே! இதுவென்ன தொல்லை! நீயேன்
தெருக்கதவை இன்றிடித்துத் தூள் செய்கின்றாய்
வாசாதுப் பெண்மணியே! என்றின் றுன்னை
வரவேற்பார் இங்கெவரும் இல்லை; வாது
பேசாது போய்ச் சேர் உன்னிடத்துக் கென்றென்
பெருஞ்சினத்தை அடக்கியிது பேச லானேன்.
"மாசேதும் பூசவில்லை. அத்தான்! உங்கள்
மன்னிப்புப் பெறவந்தேன், என்றாள் மாறாய்!

45