உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

வாடிக்கொண் டிருக்கிறஎன் முகம்பார்த் தென்னை
வாழ்விக்க வரவிருக்கும் வனிதை சொன்னாள்;
"பாடிக்கொண் டிருக்கின்ற குயில்மேல் பாடிப்
பணம்பண்ணும் காவியத்தை முடியி ராயின்,
கூடிக்கொண் டிருக்கின்றநற் காலம் கூடக்
கூடாததாகிவிடக் கூடும்! கூடின்.
மூடிக்கொண் டழநேரும் முகத்தை அத்தான்!
முறையாக முயன்றதனை முடிப்பீர்” என்றாள்.

"உறுப்பாகி, உடலாகி, உயிரு மாகி
ஒப்பற்ற ஒவியமாய் உளத்தில் புக்கு,
நெருப்பாகி எரிக்கிறதென் னுடலை; நின்ற
நீராகி யலைக்கிறதென் னுளத்தை நீண்ட
பொருப்பாகிக் கணக்கிறதென் னுயிர்மேல்; பொன்றப்
புயலாகி மோதுகிற தெனது போக்கில்!
விருப்பாகி நின்நினைவு வெளியி லென்றன்
வெற்றிதனை விரட்டுதடி கண்ணே!" என்றேன்.

இந்தவொரு சிறியமொழி என்வாய் சிந்த,
இளமுறுவல் தவழும்.இத ழதுக்கி நின்று
சிந்தித்தான் சிலையென்னச் சிறிது; சேரச்
செங்காலன்னம்போல்கால் விரலால் மெல்ல
நிந்தித்தா ளெனநிலத்திற் கீற லானாள்:
நெட்டுயிர்த்தென் முகம்நோக்கி, நிலத்தில் வீழ்ந்து
வந்தித்தாள், வரன்பனந்தா ருங்கள்:" என்றாள்
வழங்கினேன் வாரியெல்லாம்! வாங்கிச் சென்றான்

51