உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

வரவழைப்பு

வேலை வேண்டி யிருக்கவில்லை - வீட்டில்
வேலை வேறுவினாவதினால்,
மாலை நேரம் மனிதர்களின் - மனம்
மாற்றும் நல்ல மருந்தெனவே,
நீல வானில் கருமுகில்கள் - கூடி
நிறைந்திருந்தன. தாமெனினும்
சாலை யோடு நடந்துசென்றேன் - வாழ்வில்
சாந்தி தேடிச் சலிப்புடனே!

வயல்புறங்க ளிருமருங்கும் - பசும்
வண்ணம் காட்டி வயப்படுத்த
குயில்குரல்கள் குளுகுளென - மரக்
கொம்பு தோறும் செவிமடுக்க
வியக்கு மாறிரு பக்கலிலும் - உள்ள
வேலிப் பூக்கள் மணங்கமழ
இயற்கை யானஅச் சூழ்நிலையில் - என்றன்
இன்னல் வேர்கள் அறுந்தனவே!

ஆட வன்அதி லும்கவிஞன்-எனும்
ஆண்மை பீறிட் டெழுந்ததுகாண்!
பேடி யாயுளம் நொ ந்ததற்கும் - பின்னும்
பெரிதும் நாணிப் பிணிக்கலுற்றேன்.
ஊடிக் கூடி மனைவியுடன் - உறும்
உறவு பொதுவுல குக்கெனினும்
பாடி இன்புறும் பாவலர்கட் - கிதில்
பங்கும் பகுதி யெனப்பரிந்தேன்.

69