பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்கவிஞர் பெருமகன் தாகூர், தமிழறிஞர்கள் இருவரையும் அழைத்து, தாய்மொழிப் பற்றும், தாய் மண்ணைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் குறுகிய நோக்கமல்ல என்று அமைதிப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தார்.

இந்தியாவின் எந்தெந்த மாநிலத்தவர்கள் நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரைப் பாராட்டி, மதிப்பும், மரியாதையினையும் காட்டிட அழைத்தார்களோ, அவரவர்களுக்கெல்லாம் அவரவர் தாய்மொழிப் பற்று வளர்ந்திட, அறிவுறுத்தி வந்தார் கவிஞர் தாகூர்.

“உங்களுடைய தாய் மொழியான தமிழ் ஓங்கி வளர்ந்திட, ஒவ்வொருவரும் கடமையாற்றுங்கள்” என்ற அறிவுரையை, தனக்களித்த பாராட்டு விழாவுக்குரிய நன்றியுரையாக, தமிழ் நாட்டுக்கு அடையாளம் காட்டியவர் கவிஞர் தாகூர்.

அவரவர் தாய்மொழிப் பற்றுக்கொண்டு உணர்ச்சியுடன் வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்தாலும், அவருக்கே இயல்பாக அமைந்திருந்த மொழிப் பற்றினாலும், ‘யாம்பெற்ற மொழியுணர்ச்சிப் பேரின்பம்-பெறுக இந்த வையகம்’ என்ற தனியா வேட்கையாலும், ஒவ்வொரு மொழியும் அவரவர் மாநிலத்தில் ஓங்கி வளர வேண்டும் என்ற கடமை உணர்ச்சியாலும் தான் கவிஞர் தாகூர் எல்லா மொழியாளர்களுக்கும் உரிய சுயமரியாதை உணர்வைத் தட்டி எழுப்பினார்! அதனால், தமிழ் மக்களும் தமிழ் மொழி வளர்ச்சியில் தன்மானம் பெற வேண்டும் என்று கவிஞர் தாகூர் தமிழர்களுக்கு மொழிப் பற்றை ஊட்டினார்!