பக்கம்:கவி பாடலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கவி பாடலாம்

இறுதியாக உடைய சீர்கள் என்று வேறாகப் பிரிக்க வேண்டிய அவசியம் யாப்பிலக்கணத்தில் வருகிறது. பின்னாலே அது புலனாகும். அப்படிச் சீரை அடையாளம் காட்டும் போது நிரையை ஈற்றிலே உடைய ஈரசைச் சீர், நேரை ஈற்றிலே உடைய மூவசைச் சீர் என்று சொன்னால் அவை நீளமாக இருக்கும். அவற்றை எளிதிலே அடை யாளம் காட்டச் சீர்களுக்கு வாய்பாடுகள் வைத்திருக்கிறார்கள்.

ஒரசைச் சீருக்கு நாள், மலர் என்பவை வாய்பாடுகள்; நேர்-நாள், நிரை-மலர், ஈரசைச் சீர்களுக்கு உரிய வாய்பாடுகள் வருமாறு:

நேர்நேர் - தேமா

நிரைநேர் - புளிமா

நேர்நிரை - கூவிளம்

நிரைநிரை - கருவிளம். எல்லோருக்கும் தெரிந்த மரங்களின் பெயர்களையும் அவற்றில் உள்ள பூ காய் கனிகள் ஆகிய பெயர்களையும் சீர்களுக்கு வாய்பாடு வகுக்கும் போது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாங்காயில் பழ மாங்காய், ஊறுகாய் மாங்காய் என்று இரண்டு வகை உண்டு. அவற்றையே தேமா, புளிமா என்று சொல்வார்கள். அப்படியே விளம் என்ற பெயருடைய மரங்கள் இரண்டு உண்டு. ஒன்று கூவிளம்; அதுதான் வில்வ மரம். மற்றொன்று கருவிளம்; அது விளாமரம். . .

ஈரசைச்சீர்களில் நேராக முடியும் சீர்கள் இரண்டையும்

மாச்சீர் என்று குறிப்பார்கள். நேர் ஈற்று ஈரசைச் சீர் என்று நீளமாகச் சொல்வதற்குப் பதிலாக மாச்சீர் என்று சொன்னால் போதும். அப்படியே நிரை ஈற்று ஈரசைச் சீர் என்று சொல்வதையே விளச்சீர் என்று சொன்னால் போதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/45&oldid=655880" இலிருந்து மீள்விக்கப்பட்டது