உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பதிப்புரை

மொழி வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுள் முதல் பல்கலைக்கழகம் என்னும் தனிச் சிறப்புக்குரியது தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தில் ஐம்பெரும் புலங்களுள் சுவடிப்புலமும் ஒன்றாகும். சுவடிப்புலத்தின் முப்பெருந் துறைகளுள் ஒன்று அரிய கையெழுத்துச் சுவடித்துறையாகும். இலக்கியம். கல்வெட்டு. செப்பேடு. சுவடி போன்ற முதன்மைத் தரவுகள் இன்னும் நன்கு ஆராய்ந்து வெளியிடப்பட வேண்டியவைகளாகும். காகிதச் சுவடிகள் அண்மை நூற்றாண்டுகளின் ஆவணங்களாகத் திகழகின்றன. இதைக் கருத்தில் கொண்டு காகிதச் சுவடிகளைத் தொகுத்து, பாதுகாத்து பதிப்பிக்கவும் தமிழர்களின் சமுதாயப் பொருளாதார அரசியல் பண்பாட்டு வரலாற்றினை அக் காகிதச் சுவடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து வெளியிடவும் அமைக்கப்பட்ட துறையே அரிய கையெழுத்துச் சுவடித்துறையாகும். இத்துறையின் சீரிய செயல்பாட்டின் காரணமாகத் தற்பொழுது மாநில அளவில் நடத்தப்பெற்ற காகிதச் சுவடியியல் கருத்தரங்கின் கட்டுரை மலர்களே இன்று உங்கள் கைகளில் மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.

எனவே

துறை தொடங்கிய நாள் தொட்டு இதுவரை ஏழு கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் அக்கருத்தரங்குகளில் படிக்கப்பெற்ற கட்டுரைகள் அனைத்தும் இதுவரை நூல் வடிவில் வெளிவரவில்லை. அனைத்தும் உருளச்சுகளாகவே வெளியிடப்பட்டன. 1999ஆம் ஆண்டு சூலைத் திங்களில் துறைத்தலைவர் பொறுப்பேற்றபின் முதல் முறையாக இச்சுவடியியல் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டது. மாண்பமை துணைவேந்தர் அவர்களிடம் இது தொடர்பான கருத்துரு ஒன்றை அனுப்பியபோது பல்கலைக்கழகத்திற்கு எந்தவித நிதிச்செலவுமின்றி இக் கருத்தரங்கத்தை நடத்த வேண்டும்: அனைத்துக் கட்டுரைகளையும் கருத்தரங்கம் தொடங்குகின்ற நாளில் நூல் வடிவில் வெளியிடுதல் வேண்டும் என்று அறிவுறுத்தி இசைவளித்தார். பேராளர்களிடமிருந்தும் வெளியிலிருந்தும் நிதியுதவி பெற்று இக்கருத்தரங்கத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர்க் காகிதச் சுவடியோடு தொடர்புடைய அறிஞர் பெருமக்களிடம் இருபதுக்கும் மேற்பட்ட அமர்வுத் தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்குமாறு வேண்டுகோள் விடப்பட்டது. அவ்வேண்டுகோளை ஏற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காகிதச் சுவடிகளை ஆய்வு செய்து பல அரிய செய்திகளை உள்ளடக்கி ஆய்வுக் கட்டுரைகளாகத் தந்துள்ளனர். வரலாற்றில் மேலும் தெளிவு பெறத்தக்க வகையில் பல்வேறு கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. பல புதிய செய்திகள் ஆராய்ச்சி அறிஞர்களால் தரப்பட்டுள்ளன. இதனால் இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளையும் சுருக்கித் தராமல் முழுவடிவிலேயே அச்சேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இக்கருத்தரங்கம் சிறப்புற நடைபெற வாழ்த்துரை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் குரு மகாசந்நிதானம் அவர்களின் பொன்னார் திருவடி மலர்களை வணங்கி மகிழ்கிறோம்.