பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 159 காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெறுகின்றன. இதனை ஆசாரியஹிருதயம் அவஸ்தா திரயம் (திரயம் - மூன்று அவஸ்தை - நிலை) என்று பேசும். பாசுரங்களில் அடங்கிய தத்துவம்; இனி இந்த மூவகைப் பாசுரங்களில் அடங்கியதாகக் கருதப்பெறும் தத்துவங்களை விளக்க முற்படுவேன். 1. தோழிப் பாசுரங்கள் திருவாய் மொழியில் தோழிப் பாசுரங்களாக வருபவை. "தீர்ப்பாரையாம் இனி (4.6), துவளில் மணிமாடம் (6.5), கருமாணிக்க மலை (8.9) என்பவையாகும் இந்த மூன்றிலும் 'அநந்யார்ஹத்துவம் தெரியும். அநந்யார்ஹத்துவம் என்பது, மற்றவருக்கில்லாமல் ஈசுவரன் ஒருவனுக்கே அடிமைப் பட்டிருத்தலாகும். இங்குக் குறிப்பிட்ட மூன்று பதிகங்களும் முறையே வெறிவிலக்கு, தலைவியின் பெருமை, அறத் தொடு நிலை என்ற கருத்துகளை விளக்கும் பாங்கில் அமைந்துள்ளன. இவற்றுள் மூன்றாவதை மட்டிலும் விளக்குவோம். அறத்தொடு நிலை : குட்ட நாட்டுத் திருப்பதி (மலைநாடு, கேரளம்) எம்பெருமான்மீதுள்ள திருவாய் மொழி (8.9) தோழிப் பாசுரமாக நடைபெறுகின்றது. இந்தத் திருவாய்மொழி தோழி அறத்தொடு நிற்றல் என்ற அகப்பொருள் துறையில் அமைந்துள்ளது. 'அறத்தொடு நிற்றல் என்பது என்ன? 'அறம்' என்பது பல பண்புகளையும் தழுவிய சொல். அகப்பொருள் இலக்கியத்தில் பெண்ணுக் குரிய முதற்பண்பு கற்பு. கற்பென்னும் கடைப்பிடியில் நின்று களவொழுக்கத்தைப் பெற்றோருக்கு வெளிப் படுத்தல் என்பது இதன் பொருள். தோழி இதனைத் தலைமகளின் பெற்றோருக்குக் குறிப்பாக வெளிப்படுத்துவாள். தொல்காப்பியர் இதனைப் புரைதீர்கிளவி (கிளவி - சொல்) என்றும், இறையனார்களவியலுரையாசிரியர் மாறு கோள் இல்லாமொழி என்றும் குறிப்பிடுவார்.