பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பிறப்பும் வளர்ப்பும்


 

தோன்றில் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று1 (236)

இறையன்பு கொண்டவர்கள் அடியார்களின் வரலாறுகளைப்பற்றி அறிந்துகொள்வது சாலப் பயன் தரும். அத்தகைய அடியார்களில் தலை சிறந்த ஒருவர் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணாச்சாரிய சுவாமிகள். அவர்களைப்பற்றி ஒரு சில நூல்கள் வந்திருந்த போதிலும் அவை பொது மக்களுக்கு எட்டும் நடையில் அமைய வில்லை. வைணவ உலகில் ஒரு துருவ மீன் போல் திகழும் அந்த சுவாமிகள் பற்றி வைணவர்களல்லாத பிறரும் அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. அவருடன் சுமார் ஐம்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகியும், அவர்தம் படைப்புகளில் ஆழங்கால் பட்டும் இத்தனைக்கும் மேலாக அவர்தம் அன்பையும் ஆசிகளையும் கொள்ளை கொண்ட இந்த ஆசிரியர் அவர்தம் வரலாற்றை மிக்க பக்தியுடன் பதிவு செய்கின்றார். இந்த நூலில்.

முன்னோர்கள் : உடையவர், எம்பெருமானார் என்ற திருநாமங்களால் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் இராமாநுசரால் நிறுவப் பெற்றது வைணவ சித்தாந்தம்2. இந்த சித்தாந்தம்


 

1. திருக்குறள் - புகழ்-6.

2. நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாக திருமால் வழிபாடு இருந்ததேயன்றி சித்தாந்தமாக ஒரு முறை இருந்ததில்லை. சைவ சமயத்துக்கு மெய்கண்டார் ஒரு முறை வகுத்தருளியதுபோல் வைணவத்திற்கு ஒரு முறைகண்டு நிறுவியவர் இராமாநுசர் என்ற வைணவ சோதி.