பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமண வாழ்க்கையும் மேற்கல்வியும் பிறவும்

11


'திவ்விய பிரபந்த வைபவ விவேக்’ என்ற வடமொழி நூலாக வெளியிட்டு குதர்க்கவாதியின் மறுப்புக்கு ஆப்பு அடித்தார். இதுவே சுவாமி பதிப்பித்த முதல் நூல். இது நம் சுவாமிக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது.

தென்னாட்டுத் திருத்தலப் பயணம் : நம் சுவாமி தம் பதினாறாவது அகவையில் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். அங்கே குவளக்குடி சிங்கம் ஐயங்கார் சுவாமி என்ற ஒருவர் எழுந்தருளி இருந்தார். இவர் ஒரு சிறந்த வித்வான்; செல்வச் சிறப்பும் உடையவர். இவர் நம் சுவாமியின் திறமைகளைக் கேள்வியுற்று ரூ.100/அன்பளிப்பு சன்மானமாக வழங்கினார். அக்காலத்தில் இது ஒரு பெருந்தொகை. இத் தொகையைக் கொண்டு நம் சுவாமி சீவில்லிப்புத்துர், ஆழ்வார் திருநகரி, சீவைகுண்டம், வானமாமலை, திருக்குறுங்குடி முதலான திவ்விய தேசங்களைச் சேவித்து மங்களாசாசனம் செய்து பற்பல பெரியோர்களின் உகப்புக்குப் பாத்திரரானார். இதனாலும் நம் சுவாமியின் புகழ் ஓங்கியது.

விநோதத் தேர்வு : திருவல்லிக்கேணி ‘வேதவர்த்திநீ சபை’ இன்றும் புகழுடன் திகழ்கின்றது. ஆனால் அறுபது ஆண்டுகட்குமுன் மிகு புகழுடன் ஒளிர்விட்டுத் திகழ்ந்தது. நம் சுவாமி தம் 19-வது அகவையில் இந்த விநோதத் தேர்வு கொடுத்தார். இதன்படி "திவ்வியப் பிரபந்தத்திலும் அதன் வியாக்கியானங்களிலும் எதனைக் கேட்டாலும் மறுமொழி சொல்லுதல்; தவறினால் நாக்கை அறுத்து விடுதல்" என்பது, இத் தேர்வு. வினா விடுத்தவர்களின் கருத்தையுணர்ந்து மின்வெட்டுகள்போல் அவற்றிற்கேற்ற விடைகள் தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் நம் சுவாமி. இதனால் பிற்காலத்தில் விளையும் பயிர் முளையிலே தெரிந்தது.