பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளம் விடு தூது


சீரோங்கி நிற்குமெங்கள் செல்வச் சிவபெருமான்
பேரோங்கு நற்சடையிற் பேசரிய–ஏரோங்கு

கங்கையெனப் பேர்பூண்டு காரார் பொருப்பமிசை
மங்கையென வந்திடுநல் மாநீரே–பொங்கிப்

புவியில் இழிந்தோடப் பொற்புடனே வெள்ளக்
கவியின் உளமனைத்தும் காண்போய்–அவியாத

நல்லொளியை வீசுமுயர் நற்கதிரோன் தன்கிரணப்
பொன்னொளியால் பூமியினின் றேயெழுந்து–மின்னலிடை

மேமெனச் செல்வாய் நீ மேகமாய்ச் செல்வதன்முன்
ஏகவுரு வென்பதுபோ லெங்கும்–போகாத

மாய உருவாகி மாலாகி நன்மேகம்
ஆய உருவுகொண்டு ஆள்வாய் நீ!–தோயாத

வானம் படர்ந்து வளர் நிறமே வெண்மையெனத்
தானம் அறிந்ததன்பின் தான்கனத்து–காணக்

கரிய நிறங் கொண்டு கவின்பொருந்த மின்னி
அரிய இடியொலியொன் றாக்கி–நிரல் நிரையாய்

வானவில் லென்றொன்று வளைத்து அதில்பயின்ற
மோன நிற மேழும் மூழ்குவித்து–மா நிலத்தில்

நின்ற மனிதரெல்லாம் நேர்மை மழைஎமக்குப்
பொன்ற வகையளித்துப் போற்றிடுவாய்–என்றோத

தூரலாய் மாவீழ்தாய்த் தூங்காப் பெருமழையாய்ச்
சாரலாய் வந்து தழைத்துமிகு–ஒரிரவில்

நினைத்தற் கரிய நெடுமழையைப் பெய்து

மனத்திற்கு ஓகையளி மாமழையே!–புனத்தயலும்

  • 1939ல் பாலாற்று வெள்ளப் பெருக்கின் நலம்கண்டு

அதையே அன்னைக்குத் தூதாக அனுப்பிப் பாடியது.