பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

காஞ்சி வாழ்க்கை



நிலங்களை அணைத்து, மாற்றிச் சதுரங்களாக்க முயன்றேன். தென்னங் கன்றுகளை வைத்துப் பயிரிட ஏற்பாடு செய்தேன். எங்கள் முன்னேர்களால் உதவி பெற்ற ஒருவர் நடேச முதலியார் என்பவர். அவர்தான், என் அன்னை இருவரும் காலஞ் சென்றபின் ஊர் நிலங்களையும் பிறவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மேற்பார்வையில் இந்நிலங்களைப் பயிரிட ஏற்பாடு செய்தேன். நானும் அடிக்கடி ஊர் சென்று வந்திருந்தேன். பயிரிட உதவிய பண்ணை ஆட்களும் ஒத்துழைத்ததன் பேரில் விளைவு நன்கு பெருகியது; விளை பொருள்களின் விலையும் கூடிற்று. எனவே பயிரிட ஊக்கமும் பிறந்தது. இந்த நிலையில், என் நடுத்தர வயதிலே, பள்ளிப் பணிக்கு முற்றுப்புள்ளி அமைந்த காரணத்தால் முழுக்க முழுக்க உழவகை மாறத் திட்டமிட்டு அதற்கு ஏற்பச் செயல்படத் தொடங்கினேன். சில நிலங்களை மாற்றிக் கிணறுகள் அமைக்கவும் திட்டமிட்டேன். தோட்டங்களை வளர்க்கத் தொடங்கினேன். இதற்கிடையில் என் அன்னை அடிக்கடி சொல்லிவந்த ஒன்றுமட்டும் என் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. நான் பிறந்த மூன்றாம் நாளிலே, 1/2 படி அரிசிக்கும் ஒரு பழந்துணிக்கும் மாற்றாகச் 'சாதகம்' எழுதித் தந்த வள்ளுவர் குறிப்பேடு என் முன் இருந்தது. அதையே என் அன்னையார் அடிக்கடி நினைவூட்டி வந்தனர். என் முன்னோர்கள் வழிவழியாகப் பயிர் செய்கின்றவர்கள். நானும் அத்துறையில் அன்றும் செயல்பட நினைத்ததுண்டு. நான் ஊரிலேயே இருப்பதற்கு வாய்ப்பானமையின், அது கேட்டு அன்னையார் மகிழ்ச்சி கொண்டார்கள் என்றாலும் அவர்களுக்குச் சோதிடத்தில் இருந்த தளரா நம்பிக்கையினால் நான் என்றும் பயிர்த் தொழில் செய்யமாட்டேன் என்றே திட்டமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப என் சூழ்நிலைகளும் அமைந்தன. காஞ்சியும் செங்கற்பட்டும் போட்டியிட்டு, என்னை உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பதவியில் இருக்க வைக்க முயன்று, அதில் காஞ்சிபுரம் வெற்றி பெற்றமையின் காஞ்சிபுரத்தில் பணி ஏற்றமை அறிந்த ஒன்றே. பின்பு