பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

காஞ்சி வாழ்க்கை



அழைத்துவருவார். எப்படியோ எங்கள் வீட்டில் யாருக்கும் விருப்பமில்லாத நிலையிலும்-அந்தப் பெண் உள்ளம் வேறிடம் சென்றிருந்த போதிலும்-அவள் பெற்றோரும் எதிர்வீட்டுக்காரரும் எங்கள் இருவருக்கும் முடிச்சுப்போடத் திட்டமிட்டு வெற்றியும் பெற்றுவிட்டனர். எனது பெரியப்பாவும் பெரிய அன்னையும் எப்போதும் போல 'அது உங்கள் விஷயம்' என்று சொல்லிவிட்டனர். அன்னையார் செய்வதறியாது திகைத்தனர். அவள் தந்தையார் அடிக்கடி அம்மாவிடம் வந்து; ஏதேதோ பேசிய காரணத்தால் இறுதியில் எனது பாட்டி இறந்த மறுதிங்களிலேயே எனது மணம் நிறைவேறிற்று. ஆயினும் மணம் முடிந்த உடனேயே அவர்கள் உள்ளம் பொருள்மேல் நாட்டமுற்றிருப்பதைக் காட்டிவிட்டது. அதன் விளைவாக மணம் பெயருக்கு அமைந்ததேயன்றி, வாழ்வுக்கு என அமையவில்லை. இன்றும் அதேகொடுமை நீடிப்பதை நினைக்க நெஞ்சம் நடுங்குகின்றது. ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் காலம் கடந்துகொண்டே செல்லுகின்றது. மணம் செய்து கொண்டாலும், நான் மணம் புரிந்து கொள்ளாத ஒருவர் வாழ்வினையே வாழவேண்டி வந்தது. அந்த இளமை உள்ளத்தில் அவ்வளவாக அது உறுத்தவில்லையாயினும் காலம் செல்லச்செல்ல அந்த வாழ்வின் கொடுமை நன்கு புலனாயிற்று. ஊரில் பலர் 'மணம் செய்தும் சந்நியாசி" என்று என்னைக் கேலிசெய்யவும் தொடங்கிவிட்டனர். ஆம்! அதே வேளையில் என்னைக் காப்பாற்ற ஒரு சந்நியாசிதான் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

என்னை மேலே படிக்க வேண்டாம் என ஆணையிட்ட அன்னயார் அதில் உறுதியாக இருந்தமையால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பள்ளி இறுதி அரசாங்கத் தேர்வில் பொதுக்கணக்கில் 100க்கு 100ம் சிறப்புக் கணக்கில் 100க்கு 92ம் எடுத்திருந்தமையின், ஆசிரியர்கள் என்னை மேலே படித்து, பொறியாளராக வருமாறு பணிந்தனர். ஒரு சிலர் என் அன்னையிடம் வந்தும் கூறினர். எனினும் அவர்கள் மேலே படிக்க வேண்டிய