பக்கம்:காதலா கடமையா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“காதலா? கடமையா?”

என்னுரை

ழகிய உயர்ந்த பதிப்பையே வேண்டுகின்றனர் மக்கள், மக்கள் விருப்பம் என் விருப்பம். இது அழகிய—உயர்ந்த பதிப்பென்றே நான் நினைக்கிறேன்! சாந்தி ஆர்ட் உடையவர், ஓவியப் புலவர் திரு. மாதவன் அவர்கள் தீட்டிய மேலட்டை ஓவியமும், புதுவை, திரு. கிருஷ்ணமூர்த்தியவர்கள், திரு. குறள் அவர்கள் ஆகியோர் தீட்டிய உட்புற ஓவியங்களும் என்நூலை மிக உயர்வுபடுத்தி விட்டன.

இதன் முதற்கண், இந்நூலின் கதைச் சுருக்கம் அமைந்திருக்கின்றது. அது, திரு. சுந்தரசண்முகம் என்பவர் எழுதியதாகும். கதைச்சுருக்கத்தைப் படித்துப் பின் கவிதைநூலைப் படிப்பது நல்லது.

இனி, தமிழ் ஆய்வு இல்லாமலே சினிமா, நாடகம் எழுதுகின்ற இளைஞர்களுக்கு இங்கு ஒன்று சொல்ல வேண்டும். சினிமா, நாடகம் இவற்றிற்கு வேண்டிய கதைகள் பிற நாட்டினிடமிருந்து பார்த்து எழுதப்பட்டவை; அவற்றில் அமைக்கப்படும் நாகரிகமுறை, உடை அனைத்தும் அப்படி; பாட்டின் மெட்டு அப்படி; தமிழகம் தன்னுள்ளத்தையே இந்த வகையில் இழந்து விட்டதா என்னும்படி இருக்கிறது. மானம் போகிறது!

இவைகள் இப்படி என்றால், கதைக்கு அமையும் பேச்சும் பாட்டும் நாடகக் கதை எழுதியவர் அமைத்ததாகத் தெரிவதில்லை. தமிழன், தமிழன் எழுதிய நூலிலிருந்து இரவல் கொள் ளுவதால், எண்ணும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது.

அது எப்படியோ! என்நூலிலிருந்து கருத்தையோ வரிகளையோ எடுப்பதானால் கேட்டுச் செய்யுங்கள். பிறர் எழுதியவைகளை நானே எழுதினேன் என்று சொல்லிக் கொள்வது உடனே வெளுத்துவிடக் கூடியதுதானே!

புதுச்சேரி

21-2-1953 பாரதிதாசன்


இரண்டாம் பதிப்புக்குக் கவிஞர் தீட்டிய முன்னுரை இது.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/8&oldid=1484260" இலிருந்து மீள்விக்கப்பட்டது