பக்கம்:காதலா கடமையா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைச் சுருக்கம்

கொன்றை நாடு ஓர் அடிமை நாடு. அந்நாட்டின் உரிமை யில் நாட்டங்கொண்ட அந்நாட்டு மறவர் சிலர், ஓரிடத்தில் ஒன்று கூடினர். உரிமைபெறும் முறையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போழ்து, கொன்றை நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டு வரும் மாழைநாட்டு மாப்பேரரசனிடமிருந்து ஒரு திருமுகம் வந்தது. பிரித்துப் படித்தனர்.

"ஐந்து நாட் பின்னை நாம் அங்கு வருவோம் வந்து விடுதலை வழங்குவோம் நன்றே

என்று வரையப்பட்டிருந்தது.

நற்செய்தி யறிந்த நாட்டு மறவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை யில்லை. ஆனால், அம்மறவர்க்குத் தலைவனும், ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் விடுதலைக்குத் தொண்டாற்று பவனுமாகிய மகிணன் என்பான், விடுதலை என்பது ஒருவன் கொடுக்க வாங்கக்கூடியதன்று; கொடுத்தவன் மீண்டும் பறிக்க லாம்; ஆதலின், 'வெற்றி நிலத்தில் விளைவதாம் விடுதலை' என்று பகர்ந்தான். அது கேட்டு, அவன் காதலியும் கொன்றை நாட்டை முன்னாண்ட மன்னனின் பேர்த்தியுமாகிய கிள்ளை என்பாள் 'ஆம் ஆம்' என்றாள். ஆயினும் அங்கிருந்த சிலர், எப்படியாயினும் நாட்டிற்கு முதலில் விடுதலை தேவை, மறுக்க வேண்டாம் என்றனர். அதுகேட்ட கிள்ளையின் முகத்தில் அச்சம் அரும்பிற்று. உடனே, மறுக்கவில்லை என்றான் மகிணன். பின்னரே கிள்ளையின் முகத்தாமரை மலர்ந்தது.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/9&oldid=1483623" இலிருந்து மீள்விக்கப்பட்டது