பக்கம்:காதலா கடமையா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தச் செய்தியை அந்நாட்டுப் பொதுமக்களுக்கு முரசறைந்து தெரிவித்தான் வள்ளுவன். மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியினராய் ஆடினர்; பாடினர்; ஓடினர்; ஒருவர்க்கொருவர் உவப்புடன் உரைத்துக்கொண்டனர்.

நிற்க, மகிணனின் தொண்டைப் போற்றிப் புகழ்ந்தவளாய் அவனை அடையும் நெறியைப் பற்றித் தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் கிள்ளை. அப்போது அன்னை அழைக்கவும் காதல் வருத்தவும் எழுந்து சென்றாள்.

முன் கூட்டி அறிவித்திருந்தபடி, மாழைநாட்டு மாப்பேரரசன் பல்வகைப் படையுடன் கொன்றைநாடு புக்கான். மக்கள் அனைவரும் ஊரை அணி செய்து, அன்புடனும், ஆவலுடனும் வரவேற்றனர். திருவுலாப் போந்த மன்னன், ஒரு பொது மன்றில் உற்றிருந்தனன்.

அரசனை அனைவரும் சூழ்ந்தனர். மகிணன் அரசனை நோக்கிக், கொன்றை நாட்டின் பழம் பெருமையினையும், அடிமைப்பட்டதால் அஃதடைந்த சீர்கேட்டினையும், இப் போதைய மக்களின் எழுச்சியினையும், விழிப்பினையும், நாட்டின் தேவையினையும் நன்கு விளக்கினான். விடுதலை நல்க விரும்பியதைப் பாராட்டி நன்றியும் செலுத்தினான்.

கேட்ட மன்னன் மகிழ்ந்து, 'கொன்றை நாட்டினரே! அடுத்த கோழிநாட்டான் கொடியவன். அவனை வெல்ல நீங்கள் எனக்கு உதவவேண்டும்' என்றதோர் உடன்படிக்கையினைப் பெற்றுக்கொண்டான். பெற்று, விரைவில் விடுதலைப்பட்டயம் எழுதியளிப்பதாகவும் மொழிந்தான்.

மறுநாள் மன்னன் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, விடுதலைப்பட்டயம் எழுதுவதற்காக அமைச்சனை எதிர் நோக்கி மாடியில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது, அண்மையிலுள்ள ஒரு குளத்தில் தோழிமாருடன் நீராடிக் கொண்டிருந்த கிள்ளையைக் கண்டு உள்ளம் இழந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/10&oldid=1484371" இலிருந்து மீள்விக்கப்பட்டது