பக்கம்:காதலா கடமையா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னர் அங்குவந்த தன் அமைச்சனிடம், கிள்ளை தன் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதைக்கூறி, அவள் ஆரென்று கேட்டான். 'அவள் மகிணன் காதலி' எனக் கேள்விப் பட்டதாக அமைச்சன் மொழிந்தான். கேட்ட மன்னன், 'அவளை நான் அடையும்படிச்செய்வாயாக,' எனச் செப்பி, 'நாளை விடுதலை நல்குவேன்' என்று நாட்டினர்க்கு அறிவுறுத்திவிட்டான்.

அரசனின் ஆணைதாங்கிக் கொன்றைநாட்டை ஆண்டு வரும் ஒள்ளியோன் என்பான், கிள்ளையின் தமையனாகிய வாட்பொறையை நோக்கிக், 'கிள்ளை மன்னனை மறுக்காது மணக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வாயாக' என்று வற்புறுத்தியனுப்பினான்.

கொன்றை நாட்டை முன்னாண்ட அரசனின் அமைச்சன் பேரனாகிய தங்கவேல் என்பவனிடம், நாட்டின் விடுதலைக்குப்பட்ட பாட்டினைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் மகிணன். 'இனிக் கிள்ளையே அரசி' யென்றான் தங்கவேல். 'அனைவரும் ஒப்பவேண்டுமே' என்றான் மகிணன். இப்படி உரையாடிய பின்னர் தங்கவேல் சென்றான்.

தனித்துக் கிள்ளையை எண்ணி உருகிக் கொண்டிருந்த மகிணனை அமைச்சன் அடைந்தான். ‘விடுதலைப் பட்டயம் வெளியாயிற்றா’? என்றான் மகிணன். அமைச்சன், மன்னனின் காதலை உணர்த்தி, அதற்குத் தடைசெய்ய வேண்டாம் என்றும் மகிணனைக் கேட்டுக் கொண்டான். அதற்கு மகிணன் வருந்தித், தன் பெற்றோரின் எளிமையினையும், தான் நாட்டிற்குத் தொண்டாற்ற முற்பட்ட வரலாற்றினையும், கிள்ளையின் உள்ளத்தில் குடிபுகுந்த திறத்தினையும் கல்லுங்கரையுமாறு உணர்த்தினான். உணர்ந்த அமைச்சன் ஒன்றும் தோன்றாதவனாய்ச் சென்றான்.

வாட்பொறை, தன் தங்கை கிள்ளையை அடைந்து 'மன்னனை மணந்தால் வருவது விடுதலை. மறுத்தால் வருவது கெடுதலையாகும்' என்று அறிவுறுத்தினான். ஆனால், கிள்ளை மறுத்து வறிதே அனுப்பினாள் வாட்பொறையை.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/11&oldid=1484261" இலிருந்து மீள்விக்கப்பட்டது