பக்கம்:காதலா கடமையா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று கெஞ்சும் எளிய மக்களைக்
“கொன்று போடுவோம் குதிகால் வெட்டுவோம்
வீட்டை விட்டு வெளிவந்தால்” என்று
நீட்டினர் கத்தியை நிற்கும் காவலர்.
இருந்த பண்டம் அருந்திய பின், சிலர்
எரிந்த வயிற்றுக் கில்லா தழுதனர்!
நெல்லைக் குற்றிய நல்ல அரிசியை
மெல்ல லாயினர். விறகில் லாமையால்
கூளம் எரித்துச் சோளம் வதக்கி
மாளா திருக்க வயிற்றுக் கீந்தனர்!
உலைக்கொன் றின்றி உட்புறம் வளர்ந்த
இலைக்கறி, சிலபேர் குலைக்குள் இட்டனர்.
உள்நாக்கி லிட்டுப் பிண்ணாக் கைச்சிலர்
மண்ணாங் கட்டியோடு வயிற்றை நிறைத்தனர்.
உழுந்தைப் பச்சையாய் உண்டனர் சில்லோர்.
கொழுந்து மாவிலை விழுங்கினர் சில்லோர்.
புளிதின் றார்சிலர். பூண்டுதின் றார்சிலர்.
மிளகும் தீர்ந்தது. வெந்தயம் தீர்ந்தது.

ஒருவீட்டுக்குள் ஒருகுழந்தை, தன்
மரப்பாவை கடித்து வாய்நொந் தழுதது.
சுண்ணாம் பள்ளிச் சோறென உண்டு, வாய்
புண்ணாம் படியாய்ப் புரளும்ஓர் மகவு.
கன்னமும் நெற்றியும் கண்ணும் சுருங்க, வாய்
செந்நீர் போலச் சிவக்க அழும்! ஓர்
அருமைக் குழந்தைக் கன்னை துடித்தழ
உருகி உள்ளம் உடையவன் கதற
வளர்ப்பு நாய்ஒன்று வாய்விட் டுளற
இளைத்த காக்கை களைப்பாற் கரைய

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/83&oldid=1484391" இலிருந்து மீள்விக்கப்பட்டது