பக்கம்:காதலா கடமையா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டினர் பட்டதை நானே கண்டேன்.
கேட்க. நானொன்று கிளத்த எண்ணினேன்.
உன்னெதிர் நின்றே உரையேன் அதனை.
என்னினும் நானதை இயம்புதல் என்கடன்.
அடிமையி னின்றும், மிடிமையி னின்றும்
விடுதலை பெறுதல் வேண்டும் மக்கள்.
அதற்குக் கிள்ளை அவனை ஒப்புவாளோ?
மிதித்துத் தள்ளாள் மெல்லிதன் கற்பை.
உடனே செய்க ஒருசெயல், நாட்டுக்குன்
கடமை செய்கநீ, கடிது செய்க.
உன்கையால் கிள்ளையின் உயிரைப்போக்கு!
வேறுவழி ஏது? விளம்பினேன் இதனை.
மாறுபடும் உன்னிலை, மங்கும் உன்முகம்.
உன்னிலை காணுமுன் என்றன் வாழ்வைக்
கன்னல் அருந்திக் கசடு நீக்கல்போல்
முடித்துக் கொண்டேன். விடுதலை. விடுதலை.
கடிது கொணர்க கண்ணிகர் தோழரே
இங்ஙனம் தங்கவேல்”—என்று படித்தபின்,

“எங்ஙனம் என்னை இவண்விட்டுச் சென்றனை.
நாளெலாம் நல்லுரை நல்கிநீ இறக்கும்
வேளையும் நாட்டின் விடுதலை மருந்தை
அருளினாய் அப்பா, ஆருனை ஒப்பார்?
உருள்பெருந் தேர்க்கோ ஓர்அச் சாணிபோல்
இந்நாட்டு நட்புக் கிருந்தாய் ஒருவன் நீ.
பொன்னை வறியான் போக்கினான் போல
உன்னைநான் இழந்தேன் உன்னைநா டிழந்ததே
என்னைநீ இயற்றுமாறு சொன்னதை
இன்னே புரிவேன் இன்னல் புரியேன்.

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/98&oldid=1483898" இலிருந்து மீள்விக்கப்பட்டது