பக்கம்:காதலா கடமையா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைதியொடு மகிணன் "ஆர்" என்று கேட்டான்
"அமைச்சன் "நான்" என் றறைந்தெதிர் வந்தான்
கண்ணீரால் மகிணன் கழறுவான்:
"எண்ணிப் பார்த்திரோ என்னிலை ஐயா?
நாட்டினர்க் கென்ன நவிலுவேன், காதற்
கேட்டினுக் கென்ன கிளத்துவேன்" என்றான்.

அமைச்சன் அழுதான். இமைக்காது நோக்கினான்.
"நேற்று நாட்டினர் நிலைகெட்டிருந்தார்,
காற்றெலாம் அழுகுரல் கலந்தது. பசியின்
தீயோ அவரைச் சிதைக்க லாயிற்றே
தாயனைய அன்பன் தங்கவேலன்.
அரசனை அணுகி, அறிவு றுத்தினான்.
அரசன் நெஞ்சையும் அறிந்துகொண்டான்.
தெருத்தோறும் சென்றான். தீமையில் துடிக்கும்
பெருமக்கட்குப் பெரிதும் இரங்கினான்.
ஆழ எண்ணினான். அறிந்தான் ஒருவழி.
வீழும் மக்கள் வாழவும், கிள்ளையின்
கற்புக் கிடையூறு காணா திருக்கவும்
தோன்றிய அவ்வழி சொல்ல நினைத்தான்.
தான் அதைச் சொல்லத் தகாதெனச் சொன்னான்.
இவ்வா றென்னிடம் இயம்பிச் சென்றவன்
சிறிது போழ்து செல்ல, ஓர்ஓலை
அனுப்பினான். 'இந்தா அன்பனே" என்று
கனற்படு மெழுகெனக் கருத்துருகி நின்று
தந்தான் அமைச்சன். தந்த ஓலையை
மகிணன் ஆவலோடு வாய்விட்டுப் படித்தான்:
"மன்னன், கிள்ளையை மணக்க எண்ணி
இன்னல் பலவும் இழைக்க லானான்.

96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/97&oldid=1484479" இலிருந்து மீள்விக்கப்பட்டது