பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 105

‘'அட, என் துஷ்யந்த ராஜாவே! இன்று நான் எந்த விதமான தடையும் சொல்லாமல் என்னை அப்படியே உன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்; நாளை நான் கையில் குழந்தையுடன் வந்து உனக்கு முன்னால் நிற்க வேண்டும். நீ என்னைப் பார்த்து, ‘யார் நீ?” என்று கேட்க வேண்டும். நான் உன்னைப் பார்த்து, அடப் பாவி, என்னையா தெரியவில்லை உனக்கு? என்றுக் கதற வேண்டும். இதுதானே நீங்கள் சொல்லும் கலாச்சாரம்? -வேண்டாம், ஐயா என்னுடைய அனாச்சாரம் என்னோடு இருக்கட்டும்; உன்னுடைய கலாச்சாரம் உன்னோடு இருக்கட்டும். நான் வருகிறேன்!” என்று கடைசியாக அவனைக் கையடித்துக் கும்பிட்டுவிட்டு அவள் நடந்தாள்.

அவள் சென்ற திசையையே ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற அவனை நெருங்கி, ‘மன்னிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக ஏதோ நடந்துவிட்டது; அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் எப்போதும் போல உங்கள் ஆதரவை எனக்கு நீங்கள் அளிக்க வேண்டும்’ என்றார் சர்மாஜி.

‘சரிதான் போங்காணும் என்னைப் போன்ற பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள் வந்து தங்கும் இடத்தில் அவனைப் போன்ற பொறுக்கிப் பயல்களுக்கு நீர் எப்படி இடம் கொடுக்கலாம்? உம்மால் வந்த வினைதானே இவ்வளவும்?’ என்றான் அவன், எரிந்து விழுந்து.

‘கோபித்துக் கொள்ளக் கூடாது மாதம் பிறந்தால் முப்பது ரூபா முழுசாகக் கிடைக்கிறதே என்று விட்டேன்; அவன் என்னடாவென்றால் வம்புக்காரப் பயலாயிருக்கிறான். நீங்களும் இதுவரை எத்தனையோப் பெண்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருக்கிறீர்களே, இப்படி ஒரு நாளாவது நடந்ததுண்டா?”

‘அப்போதெல்லாம் அவனைப் போன்ற தற்குறிகள் இங்கே இல்லை; அதனால் நடக்கவில்லை!"