151
கட்டித் தழுவி அழியவைத்தவன், என்னை எட்டி உதைத்தான் எரிகிற நெருப்பிலே! மீண்டும் மீண்டும் கெஞ்சினேன்—மனம் மாறிவிடும், இரக்கம் பிறக்கும், பழைய காதல் சம்பவம் நெஞ்சை உறுத்தும், பாலகனை எண்ணியாவது பாவியின் மனம் மாறும் என்று எண்ணினேன்—பல தடவை சந்தித்தேன் — அவனுடைய முரட்டுத்தனம்தான் வளர்ந்தது—மீண்டும் பட்டாளத்துக்கே போய்விட்டான் — குழந்தையும் இறந்தது—நான் டான்சுக்காரியானேன்...
தங்:— அவன்...?
பெண்:— சாகவில்லை...சோல்ஜராக இருக்கிறான்—சௌக்யமாக இருக்கிறான். அவனுக்கென்ன ஆண்மகன் — ஒரு பெண்ணைப் படுகுழியிலே தள்ளினான் என்பது தெரிந்து உலகம் அவனைத் தண்டிக்கவா செய்யும்?
தங்:— என்னாலே தாங்கிக்கொள்ளவே முடியவில்லையம்மா, இந்த வேதனை...பெரியவரே! நீரும் அழுது என்னை வாட்டவேண்டாம். காதலின் மேன்மையும், பெண்ணின் பெருமையும் தெரியாத பேயன்—பொற்கொடி; அவன் எங்கே இருக்கிறான் இப்போது — பெயர் என்ன...!
பெ:— அழகூரிலேயே அடிக்கடி...நான் பார்க்கிறேன் அண்ணா! அவன் பெயர்! வேதனை தருகிற வேடிக்கை அண்ணா! அது, அந்தப் பாவியின் பெயர், தருமலிங்கம்...
தங்:— தருமலிங்கமா...ஒல்லியாக சிகப்பாக.
பெ:— (தலை அசைத்தபடி) அரும்பு மீசை... அழகான பல் வரிசை. பெரிய காது...பேச்சு சாதுரியமாக இருக்கும்...
தங்:— அடப் பாதகா! அவன், என் நண்பன்தான்—ஒரு வார்த்தை சொன்னதில்லையே என்னிடம்...
பெ:— கொட்டுகிற தேளும், கடிக்கிற பாம்பும் ஓடி ஒளியுமே தவிர, செய்த காரியத்தைச் சொல்லுகிறதா, அண்ணா, அவன் மனிதப் பாம்பு; என்னைத் தீண்டினான், விஷம் ஏறி! பட்டு செத்தாள், பொற்கொடிதானே இருப்பது இப்போது...