19
இறங்கிவிடுவோம். இரண்டொரு நிமிஷத்திலே.. டமால்—டப்—டிப்—பட—படா,—டமீல்—ன்னு சத்தம் — மலை தூள் தூளாகும் கட்டடம் இடியும்—நெருப்பு எங்கு பார்த்தாலும் கிளம்பிவிடும்.
எங்க ஆளுங்க சும்மா இருப்பாங்களா? ஆன்ட்டி ஏர் கிராப்ட் கன், அப்படின்னா, ஏரோப்ளேனைச் சுடற துப்பாக்கி—அதை எடுத்து, சட சட சட சட—சட்—சட சட சடசட்—னு சுடுவாங்க குண்டு, பிளேன் மேலே பட்டதும், “ங்கொய்ய்” னு ஒரு சத்தம், கேட்கும் —பிளேன் சுழலும் பம்பரம் போல... நெருப்பு பிடிச்சிடும்—கீழே விழும். பிளேன் அச்சுவேறே ஆணிவேறேயாகிவிடும்.
ச:— கேட்டாலே பயமா இருக்கே...
சி:— இதுதானா பிரமாதம்! நாங்க சாதாரணமா, பிணத்து மேலேயே கூட நடந்து போவோம். காலையிலே எங்க கூட உட்கார்ந்து சாயா சாப்பிடுவான், சாயந்திரம் என்னடான்னு பார்த்தா, பிணமாக் கிடப்பான்.
வே:— அடி ஆத்தே! பாழாப்போன சண்டையாலே பாதி ஜனங்க மாண்டு போனாங்க....
ச:— அதை ஏன் சொல்றே! அன்யாயம், இவ்வளவும் எதுக்காகத் தெரியுமோ? மார்க்கட் பிடிக்கத்தான்!
வே:— மார்க்கட்...?
ச:— அதாவது, ஒவ்வொரு தேசமும் மலை மலையாச் சாமான்களைச் செய்து குவிச்சுடறான்—கொள்ளை கொள்ளையா இலாபம் அடிக்க வேணும் என்கிற பேராசை, சாமான்கள் தயாரானதும். மார்க்கட் வேணுமோன்னோ! அதுக்குக் கிளம்புவான். இவனைப் போல இன்னொரு தேசத்தானும் கிளம்புவான். இரண்டு தேசமும் ஒரே மார்க்கட்டைக் கண்டதும், சண்டைதான், உனக்கா மார்க்கட் எனக்கா மார்க்கட்டுன்னு...