உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதல் ஜோதி, அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

குறை. நம்ம உறவிலே எவ்வளவு பேர் இருக்கா, டீசன்ட் பெலோஸ்... போய் லவ் பண்றாளாம் இந்தப் புரூட்டை

சு:— அவரும் ஆயிரம் தடவை தடுத்தார்—நான்தான் அவருக்குத் தைரியம் சொன்னேன்; ஜாதி பேதம், இதெல்லாம் நான்சென்ஸ்; காதல் ஜோதி முன்பு இதெல்லாம் தலை காட்டாது என்று சொன்னேன்.

அ:— இடியட்.

சு:— நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து எடுத்துண்ட போட்டோ கூட அடுத்த ரிபப்ளிக்லே வாறது; சீர்திருத்தத் தம்பதிகன்னு தலைப்பு.

அ:— சுகுணா! ஆத்திரத்தைக் கிளப்பாதே. இதை நான் அனுமதிக்க முடியாது. அப்பா காதிலே விழுந்தா, தூக்கு போட்டுக்கொண்டு சாவார்.

சு:— என் முடிவை மாற்ற முடியாது.

அ:— உளறாதே, அசடே! ஒரு நாலு நாளைக்கு மனதிலே குடையும்; நம்மகுலம், கோத்திரம், அந்தஸ்து இவைகளை நாசமாக்கிக் கொள்றதா, காதல் பைத்தியத்தாலே? சுகுணா நீ சமத்துன்னு எண்ணிண்டிருந்தேன், இப்படி ஒரு பைத்யக்காரச் சேஷ்டையிலே ஈடுபடுவாளா?

சு:— என் மனதிலேயும் இதேபோலச் சந்தேகமும் சஞ்சலமும் தான் ஆரம்பத்திலே இருந்தது அண்ணா. ஊர் பழிக்குமே, ஜாதி ஆச்சாரம் பாழாகிறதுன்னு பெரியவா ஏசுவாளேன்னுதான், நானும் முதலிலே, எண்ணிண்டிருந்தேன். தெளிவு, தைரியம், மனதிடம் எல்லாம் நேக்கு உன்னாலே தான் ஏற்பட்டுது.

அ:— என்னாலே ஏற்பட்டதா? என்னடி அசடே! பிதற்றல் இது.

சு:— நீ ‘ஆக்ட்’ செய்கிறயே ‘காதல் ஜோதி’ அந்தக் கதையைப் படிச்சேன், கலாவாணி பத்திரிகையிலே. பிறகு-