72
தான் எனக்கு மனதிடம் ஏற்பட்டது. காதல் ஜோதியை ஜாதிப் புயல் அணைக்காது என்கிற தைரியம் ஏற்பட்டது.
அ:— (கோபமாக) என்ன சுருணா இது; சினிமாக் கதை அது. எவனெவனோ அவனவனுக்குத் தெரிஞ்சதை எழுதறான். ஏதோ ஜனங்களுக்குப் பிடித்த மாதிரியான கதையைப் படமாக்கினாப் பணம் நிறைய வரும்னு முதலாளிகள் அப்படிப்பட்ட படமாப் பிடிக்கிற. நாங்களும் பணம் கிடைக்கும் நல்ல பேரும் வரும்னு ‘ஆக்ட்’ செய்கிறோம், அதனாலே, நீ நெஜமாவே அதுபோலச் செய்யறதா. வயத்துப் பிழைப்புக்காக ஆயிரத்தெட்டு போறதுதான். பலமாதிரி வேஷம்போட்டுக் கொள்றதுதான். அதனாலே, சினிமாக் கதையிலே வர்றமாதிரியா நடக்கிறதா? நான் என்னதான் சினிமாவிலே நடித்தாலும், எவ்வளவு சீர்திருத்தக் கதையிலே, புரட்சிக் கதையிலே நடித்தாலும், நான் யார்; குலம் என்ன; கோத்திரம் என்ன; அந்தஸ்து என்ன; என்கிறதை மறந்துவிடுவனோ. உன் போல அசடுகள்ன்னா. அந்தக் கதையிலே இப்படிச் சொல்லியிருக்கு, இந்தப் படத்திலே இப்படி சொல்லியிருக்குன்னு பேசிண்டு கிடக்கும். பொழுதுபோக்குக்குப் படம் பார்க்கச் சொன்னாளா உன்னை, இல்லே படத்தைப் பார்த்து, அதன்படி நடக்கச் சொன்னாளா!
சு:— கோபமும் வருது, சிரிப்பும் வருதுண்ணா உன் பேச்சைக் கேட்டு. உங்க ‘காதல் ஜோதி’ விளம்பரம் என்ன சொல்லுது தெரியுமா? ‘புது உலகுக்குப் புது அறிவு தரும் புதுமையான படம்.’
அ:— ஆமாம்! புது விளம்பரம் பத்து இலட்ச ரூபாய் செலவில் தயாராகிறதுன்னுகூட விளம்பரம் இருக்கு. இரண்டு இலட்ச ரூபா கூடச் சரியாச் செலவாகவில்லை.
சு:— படம் ஊரை ஏமாத்தத்தான் எடுக்கிறான்னு சொல்லுங்க...
அ:— சொல்ல வேணுமா? படம் எடுக்கறது ஒரு தொழில். கற்பூரக் கடைக்காரன் கற்பூரம் விற்றானானா, அவனோட