பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

காதல் நினைவுகள்


இட்டவிழி எடாமலும், இருக்கும் ஓவியப்
பெண்ணே பாராய், பெண்ணே பாராய்!

இருவர்நாம் ஒன்றாய் இருந்து,நம் விழிநான்கு
காண, இரண்டு கருத்தும் கலந்தபடி
ஒரே நேரத்தில்நம் உயிர்இன் புறுவதை
விரும்புகின்றேன்! வீதியில் நடப்பது
கரும்பான காட்சி, காதுக்கு நறுந்தேன்!
தனித்திருந்து காண் என்று சாற்றிவிடாதே!
சன்னலண்டை என்னிடம், விரைவில்
பெண்ணே வாராய், பெண்ணே வாராய்!

பார்த்தனையோ என் பச்சை மயிலே?
‘புதிதிற் பூத்த பூக்காடுதான் அது’!
நான் அதைப் பெண்ணென்று நவிலமாட்டேன்.
அக்காட்டின் நடுவில் ‘அழகுடன் மணத்துடன்
செக்கச்செவேலெனச் செந்தா மரை‘பார்!
அதை, அவள் வாய்என்று அறைய மாட்டேன்
அம்மலர் இரண்டிதழ் அவிழ்த்தது பார்நீ
நான் அதை உதடுஎன்று நவிலமாட்டேன்.
‘இதழில் மொய்த்தன எண்ணிலா வண்டுகள்‘
வீதியில் மக்களின் விழிகளோ அவைகள்?
அவ்விதழ் அசைந்தசைந் தசைந்து கனியடு,
பிசைந்ததேன் கேள் கேள் அதனை
இசையும் தமிழும் என்றால் ஒப்பேனே!

எங்களிஷ்டம்

தென்றல் விளைந்தது, முல்லை மலர்ந்தது,
தீங்குரற் பக்ஷிகள் பாடின.
குன்று நற்சோலை விநோத மலர்க்குலம்
கோலம் புரிந்தன எங்க ணும்.
நின்றிருந்தான் தனியாய் ஒரு வாலிபன்
நேரிலோர் தாமரைப் பூவிலே
அன்புறு காதலி யின்முகங் கண்டனன்;
ஆம்பலில் கண்டனன் அவள் விழி!