பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

15


அந்த நொடிதனிலே — கணக்கன்
        ஆடி நடக்கலுற்றான்.

“ஆசைக் கொருமகளே — எனதோர்
         அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான் — அவனோ
         கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ — அந்தக்
         கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க — நினைத்துன்
         பெற்றவர் சென்றுவிட்டார்.

ஏழைஎன் றெண்ணாதே — கணக்கன்
         ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும் — பிறகு
         தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே“ — எனவே
         ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்? — “மாப்பிள்ளை
         யார்?“ என்று கேட்டனள்பெண்.

“அந்தக் கணக்கப்பிள்ளை“ — எனவே
         அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில் — செவிகள்
         குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே — தனது
         தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக் — குறிக்க
         வாயும் வராதிருந்தாள்.

அந்த மணவறையில் — உரைத்த
         அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும் — அவனின்
         ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி — நடுவில்
         கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின் — நடுவில்
         மணம் முடித்தார்கள்.