பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

23


கண்ணிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதற்
     கனல்மாற்றும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

கனிவிருக்கும் அவளிடத்தில்! சங்கைப் போலும்
     கழுத்திருக்கும்! உயர்பசுமை மூங்கிலைப் போல்
தனித்துயர்ந்த தோளிருக்கும்! கன்னம், ஈரச்
     சந்தனத்துப் பலகைபோல் குளிர்ந் திருக்கும்!
இனித்திருக்கும் பொன்னாடை! அவள் சிலம்பில்
     எழும்ஒலியில் செவியனுப்பி நிற்பேன். அந்த
நினைவிருக்கும்; வரமாட்டாள்; சாவி னின்று
     நீக்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.

வளமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் தூய்மை!
     மயிலிறகின் அடியைப்போல் பல்லி லெல்லாம்
ஒளியிருக்கும்! உவப்பிருக்கும் காணுந் தோறும்!
     உயர்மூக்கோ எள்ளுப்பூப் போலி ருக்கும்!
தெளிவிருக்கும் பேச்சிலெல்லாம் சிரிப்பி ருக்கும்!
     செழும்ஊரார் அறியாமல் வரவும் கொல்லை
வெளியிருக்கும்! வரமாட்டாள்; என் விழிக்கு
     விருந்தளிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

பொறையிருக்கும் அவளிடத்தில்! கொல்லை தன்னில்
      பூம்பாகற் கொடிதனது சுருட்கை யூன்றி
உறைகூறை மேற்படர்ந்து சென்றிட் டாலும்
      ஒருதொடர்பும் கூறையிடம் கொள்ளாமை போல்
பிறரிருக்கும் உலகத்தில் என்னையே தன்
      பெறற்கரிய பேறென்று நெஞ்சிற் கொள்ளும்
முறையிருக்கும்! வாமாட்டாள்; வந்தே இன்ப
      முகங்காட்டும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அறமிருக்கும் அவளிடத்தில்! இருக்கும் வாய்மை!
      அண்டையிலே பெற்றோர்கள் இருக்கும் போதும்
புறமிருக்கும் என்மீதில் உயிர் இருக்கும்!
     “பூத்திருக்கும் நான்காத்த முல்லை” யென்றும்
“நிறம்காண வேண்டும்“என்றும் சாக்குச் சொல்லி
      நிழல்போல என்னிடத்தில் வரவும் நல்ல
திறமிருக்கும்! வரமாட்டாள்; வந்தென் நோயைத்
      தீர்க்குமோர் எண்ணந்தான் அவளுக் கில்லை.