பக்கம்:காதல் நினைவுகள், பாரதிதாசன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

காதல் நினைவுகள்


உயர்விருக்கும் அவளிடத்தில்! இருக்கும் நேர்மை!
     உடலாவி பொருளிவற்றில் நானும்,தானும்
அயலில்லை என்னுமோர் உளம் இருக்கும்!
     அசைகின்ற இதழிலெல்லாம் அத்தான் என்ற
பெயரிருக்கும்! எவற்றிலுமே எனை யழைக்கும்
     பித்திருக்கும்! மாடியினின் றிறங்க எணிக்
கயிறிருக்கும்! வரமாட்டாள்; என்செய்வேன்! நான்
     கடைத்தேறும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

சீரிருக்கும் அவளிடத்தில்! உலகம் போற்றும்
     செந்தமிழ்மங் கைக்கிருக்கும் சிறப் பிருக்கும்!
தார்இருக்கும் நெடுந்தோளான் பாண்டி நாட்டான்
     தானேநான் எனும்கொள்கை தனக் கிருக்கும்.
ஊரிருக்கும் தூக்கத்தில் கொல்லைப் பக்கத்
     துயர்கதவின் தாழ்திறந்து வரவோ பாதை
நேரிருக்கும் வரமாட்டாள்; என்றன் காதல்
     நெருப்பவிக்கும் எண்ணந்தான் அவளுக் கில்லை.

அருளிருக்கும் அவளிடத்தில்! இசையி ருக்கும்!
     ஆடவனும், ஓர்மகளும் ஒப்ப நோக்கி
இருள்கிழித்து வெளிப்படுமோர் நிலவு போல
     இரண்டுளத்தும் திரண்டெழுந்த காத லுக்குத்
திரைஎன்ன மறைவென்ன? அவள்என் தோள்மேல்
     தேன்சிட்டைப் போற்பறந்து வருவ தற்கும்
கருத்திருக்கும் வரமாட்டாள்;வந்தெ னக்குக்
     காட்சிதரும் எண்ணந்தான் அவள் பாலில்லை.

பிற்சேர்க்கை!

காதலனுக்குத் தேறுதல்

காதற் பசியினிலே கைக்குவந்த மாம்பழத்தின்
மீதில் இதழ்குவித்து மென்சுவையை நீஉரிஞ்சி
நாவார உண்ணுங்கால் நண்ணுமந்தத் தீங்கனியைச்
சாவான ஓர்குரங்கு தான்பிடுங்கிற் றேயோ!

விழிநோக வையமெல்லாம் தேடி, மிகுக்க
மொழிநோகக் கூவி,நீ முன்பெற்ற கிள்ளையிடம்
காதல்மொழி பழகக் கண்ட பெரும்பூனைச்
சாதல்வந்து கிள்ளைதனைத் தட்டிப் போயிற்றோ!