பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காத்தவராயன் கிழ்ச்சாதியால். பறையன் என்றே தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறான் அவனை வளர்த்தவன் ஒர் நாடுகாவல் அதிகாரி. காத்தவராயன் ஒரு பிராம்மணப் பெண்ணைக் காதலித்தான். அவளே மணம் செய்து கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டான். அவனைப்பிடித்து அரசன் கழுவேற்றிவிட்டான். அவனை மக்கள் தெய்வமாக வழிபடுகின்றனர்.

கதை, பிராமணர் மன்னனிடம் வந்து முறையிடுதலோடு தொடங்குகிறது. ஆரியமாலை என்ற பிராம்மணப் பெண்ணைப் பரிமணம் என்ற காத்தவராயன் சிறையெடுத்துப் போய்விட்ட தாகவும், அவனைப்பிடித்துத் தண்டிக்கவேண்டும் எனவும் அவர்கள் அரசனிடம் வற்புறுத்துகிறார்கள்.

பரிமளம் என்பவன் சேப்பிளையான் என்ற நாடுகாவல் அதிகாரியின் வளர்ப்புமகன். அரசன் சேப்பிளையானை அழைத்து அவனைப்பிடித்துக் கொண்டு வந்து கழுவேற்றிக்கொன்று விடக் கட்டளையிடுகிறான் சேப்பிளையான் நாடுமுழுவதும் தேடியும் மகனைப்பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் நாட்டுக்கு வெளியே சென்று தேடிக் கண்டுபிடிக்கிறான். தந்தை சொல்லைக் கேட்டு அவனோடு சோழநாடு செல்லுகிறான், சோழ மன்னன் நீ ஏன் பெரும்பாவம் செய்தாய் என்று கேட்கிறான்.

தான் செய்தது தவறென்றால் மக்கள் வணங்கும் தேவரும், தெய்வங்களும் இவ்வாறு பெண்களைக் காதலித்து மணம் செய்து கொண்டுள்ளார்கள் என்றும் அவர்களும் தவறு செய்தவர்களே என்றும் சொல்லுகிறான். இதில் மும்மூர்த்திகளும் அடங்குவர்.

பார்வதியாள் தானிருக்க பரமசிவனாரும்
ஓர் சடையில் கன்னிதனை ஒளித்துமே வாழலையோ.

உலகமளந்த தொரு உத்தமனாம் மாயவனும்
நலமுள்ள உருக்கு மணியாள் நன்றாய் அருகிருக்க

தேசமதிலாய் சிறக்கவே கொண்டருளி
சத்திய பாமாவைத் தேடி அனையலையோ

அன்னமதிலேறும் ஆனதொரு பிர்ம்மாவும்
வர்ணக் கலைமகளை வாக்கிலே வைத்தருளி

தானே படைத்துச் சமைத்த தொரு ஊர்வசியை
மானே எனத் தொடர்ந்து மருவிப் புணரலையோ

இந்திரர்க்கு இந்திராணி இசைந்து அருகிருக்க
வந்து அசலிகையை மருவிப்புணரலையோ.