பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சுருட்டு, சுவையாக இருக்கிறது என்பதற்காகவோ, அதன் மணத்தை விரும்பியோ காந்தியார் அப்பழக்கத்தை மேற்கொள்ளவில்லை. சுருட்டைக் குடித்துச் சுருள் சுருளாகப் புகைவிடுவதில், அவருக்கு ஒரலாதியான பற்று; அவ்வளவு தான். முதலில் பெரியவர்கள் குடித்தெறிந்த துண்டுச் சுருட்டுகளைப் பொறுக்கிக் குடிக்கத் தொடங்கினர். அனால் சுருட்டுத் துண்டு நினைத்தபொழுதெல்லாம் கிடைக்குமா? பெரியவர்கள் எப்பொழுது குடித்துவிட்டுப் போடுவார்கள் என்று எதிர்நோக்கி யிருக்க வேண்டும். அதெல்லாம் அடிகளுக்கு ஒத்துவரவில்லை. முழுச்சுருட்டே குடிக்கத் தொடங்கினர். ஆனல் முழுச்சுருட்டுக் குடிக்கக் காசு வேண்டுமே. வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் 'இனாம்’ காசில் திருடத் தொடங்கினர். போதாதற்குத் திருட்டுச் சுருட்டுத் திருப்பணியில் தமையனாரும் நண்பர்களும் சேர்ந்து கொண்டார்கள். தனி வியாபாரம் கூட்டு வியாபாரமாகி விட்டது. சுருட்டு வாங்க நிறையக் கடன் பட்டார் காங்தியார். கடனை அடைக்க வழி தெரியாது விழித்தார். கடைசியாகத் தமையனாரின் தங்கக் காப்பிலிருந்து ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்து விற்றுக் கடன்காரர்களுக்குக் கொடுத்தார்.


அஞ்சி அஞ்சிச் சுருட்டுக் குடிப்பது அடிகளுக்கு வெறுப்பாக இருந்தது. பெரியவர்களைப் போல் சுதங்தரமாகச் சுருட்டுக் குடிக்க முடியவில்லையே என்று பெரிதும் வருந்தினர். நண்பர்களும் அப்படியே வருந்தினர். உடனே எல்லோருக்கும் வாழ்க்கையே வெறுத்து விட்டது. சுதந்தர மற்று அஞ்சி வாழ்வதை விடச் சாவதே மேல் என்று முடிவு செய்தனர். நேராகக் கேதார்ஜி கோவிலுக்குச் சென்றனர். இறைவனை உள்ளத்தால் வணங்கி இறுதி விடை பெற்றனர். தற்கொலை செய்து கொள்ள நஞ்சு வேண்டுமல்லவா? ஊமத்தை விதையில் நஞ்சிருப்பதை அறிந்து, அதை எப்படியோ தேடிக் கொணர்ந்தனர்.