பக்கம்:கானகத்தின் குரல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 : கனகத்தின் குரல் சறுக்குவண்டியில் பூட்டியிருந்த பத்து நாய்களையும் அவிழ்த்துவிட்டுவிட்டு பக்கை அதில் பூட்டினார்கள். அதற்கும் உற்சாகம் பொங்கிற்று, ஜான் தார்ன்டனுக்காகப் பெரியதொரு காரியம் செய்யவேண்டும் என்று எப்படியோ அது உணர்ந்து கொண்டது. அதன் தோற்றத்தைக் கண்டு எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். அந்தச் சமயத்தில் அது நல்ல கட்டுறுதியோடிருந்தது. அதன் உடம்பிலே அனாவசியமான ஊளைச்சதை ஓரிடத்திலும் கிடையாது. அதன் எடை இப்பொழுது நூற்றைம்பது ராத்தல், அந்த எடையிலே வீணான பகுதி ஒரு சிறிதும் இல்லை. உடம்பு முழுவதும முறுக்கேறிய தசைநார்களும் சக்தியும் நிறைந்திருந்தன. அதன் உடம்பில் செறிந்திருந்த உரோமம் பட்டுபோல் பளபளத்தது. கழுத்திலும் தோள்களிலும் பாதி சிலிர்த்தது போலத்தோன்றிய உரோமவரிசையிலே அதன் சக்தி பொங்கி வழிவது போலக் காணப்பட்டது. அகன்ற மார்பும், உறுதியான முன்னங்கால்களும் அதன் உடம்புக்குத்தக்கவாறு நன்கு அமைந்திருந்தன. எஃகு போன்ற அதன் தசைநார்களைத் தொட்டுப் பார்த்தபிறகு ஒன்றுக்கு மூன்றாக இருந்த பந்தயப் பணம் ஒன்றுக்கு இரண்டாகக் குறையலாயிற்று 'எண்ணுறு டாலர் விலை கொடுத்து இந்த நாயை நான் வாங்கத் தயார். பந்தயத்திற்கு முன்னாலேயே எனக்குக் கொடுங்கள் என்று "ஸ்கூக்கும் பென்ச் ராஜா விலை பேச முன்வந்தான். தார்ன்டன் தலையை அசைத்துப் பக்கை விற்க மறுத்தான்; பிறகு பக்கின் அருகிலே சென்றான். 'நீ தள்ளி நிற்க வேணும்; அதுதான் நியாயம்” என்று மத்தேயுஸன் குறுக்கிட்டான். கூட்டம் சற்று விலகி மெளனமாக நின்றது. பணயம் வைக்கிறவர்கள் மட்டும் ஒன்றுக்கு இரண்டு என்று வீணாகக் கூவிக்கொண்டிருந்தனர். பக் மிகவும் வலிமையுள்ள நாய் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள் இருந்தாலும் ஐம்பது ராத்தல் மூட்டைகள் இருப்பதைக்கொண்ட வண்டியை இழுப்பது முடியாத காரியம் என்று அவர்கள் கருதிப் பணயம் வைக்க விரும்பவில்லை. தார்ன்டன் பக்கின் அருகிற்சென்று முழங்காலிட்டு அமர்ந்தான். இரண்டு கைகளாலும் அதன் தலையைப் பிடித்துக்கொண்டு அதன் கன்னத்தோடு கன்னத்தை வைத்துக்கொண்டான். வழக்கம்போல அவன் தலையைப்பிடித்து ஆட்டவில்லை; செல்லமாகத் திட்டவுமில்லை. ஆனால் 'என்மேல் உனக்கு அன்புண்டல்லவா? பக், அன்புண்டல்லவா?" என்று காதோடு காதாகக் கேட்டான். அதைக் கேட்டதும் ஆர்வத்தோடு பக் முணுமுணுத்தது.