பக்கம்:கானகத்தின் குரல்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் ! 103 மற்றவர்களும் அங்கே கூடினார்கள். அவர்களுக்குள்ளே பந்தயம் கட்டத் தொடங்கினார்கள். சறுக்குவண்டியைச் சுற்றிலும் கம்பளி உடை அணிந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்றனர். இரண்டு மணி நேரமாக மத்தேயுஸனுடைய சறுக்குவண்டி ஆயிரம் ராத்தல் சுமையோடு வீதியில் நின்றுகொண்டிருந்தது. அந்தச்சமயத்தில் குளிர் மிக அதிகம். வெப்பமானி பூஜ்யத்திற்கும் கீழே அறுபது டிகிரி காட்டியது. அதனால் வண்டியின் சறுக்கு வட்டைகள் நன்றாக இறுகிவிடவே அவற்றைச் சுற்றியுள்ள பனிக்கட்டிகள் நன்றாக இறுகிவிட்டன. அந்த வண்டியை பக்கால் நகர்த்தவே முடியாது என்று பலர் பந்தயம் கட்டினார்கள். வண்டியை நகர்த்துவதென்றால் பனிக்கட்டியிலிருந்து வட்டைகளை மேலே எடுத்துவிட்ட பிறகா அல்லது பனிக்கட்டியில் பதிந்து இருக்கிறபோதே நகர்த்துவதா என்பதைப் பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. பனிக்கட்டிகளிலிருந்து வட்டைகளை விடுவித்த பிறகுதான் பக்கை வண்டியில் பூட்டி அதை நகர்த்தி இழுக்கச் செய்ய வேண்டும் என்று ஒப்ரியன் வாதாடினான். 'வட்டைகள் பனிக்கட்டிகளில் பதிந்திருக்கும்போதே வண்டியை வெளியேற்றக்கூடாது என்று மத்தேயுவன் வற்புறுத்தினான். அங்குக் கூடியிருந்த மக்களில் பெரும்பான்மையோர் மத்தேயுஸன் சார்பாகவே தீர்ப்பளித்தார்கள். அதனால் நிலைமை அவனுக்குச் சாதகமாயிற்று. பக்குக்கு எதிராகப் பந்தயப்பணமும் அதிகமாகத் தொடங்கியது. பக் வெற்றியடையும் என்று யாரும் நினைக்கவில்லை. அதனால் அதன் சார்பாகப் பந்தயம் வைப்பவர்களும் இல்லை. மிகுந்த சந்தேகத்துடனேயே தார்ன்டன் பந்தயத்தில் இறங்கினான். பத்து நாய்கள் பூட்டிய அந்தச் சறுக்கு வண்டியை பார்த்ததும் அதை நகர்த்த முடியாதென்றே அவனுக்குத் தோன்றியது. மத்தேயுஸனுக்கு உற்சாகம் பொங்கிக் கொண்டிருந்தது. 'ஒன்றுக்கு மூன்று-நான் பந்தயம் வைக்கிறேன். இன்னும் ஆயிரம் டாலர் வைக்க நான் தயார்-நீ என்ன சொல்லுகிறாய்?" என்று அவன் தார்ன்டனைக் கேட்டான். தார்ன்டனுடைய சந்தேகம் வெட்டவெளிச்சமாக இருந்தது. அவனுக்கு ரோசம் பிறந்துவிட்டது. தோல்வியைப் பற்றிக் கருதாமல் அவன் பந்தயத்தில் முனையலானான். ஹான்ஸையும், பீட்டையும் அவன் அருகில் வரவழைத்தான். அவர்களிடம் பணம் கொஞ்சந்தான் இருந்தது. மூவரிடமும் உள்ள பணத்தைச் சேர்த்துப் பார்க்க இருநூறு டாலர்கள் கிடைத்தன. அவைதான் அவர்களுடைய மூலதனம். சற்றும் தயங்காமல் அவற்றைப் பணயம் வைத்தார்கள். மத்தேயுஸன் அறுநூறு டாலர் வைத்தான்.