பக்கம்:கானகத்தின் குரல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 55 சாட்டையின் வீச்சு எப்பொழுதும் கேட்டது. ஆனால் அதனால் அதிகப்பலன் உண்டாகவில்லை. பிரான்சுவாவின் கவனம் வேறு பக்கம் திரும்பியதும் நாய்கள் மீண்டும் சண்டையிடலாயின. அவன் ஸ்பிட்ஸின் சார்பாகத் தன் சாட்டையோடு நின்றான். மற்ற நாய்களின் சார்பாக பக் நின்றது. இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் பக்கே அடிப்படையான காரணம் என்று பிரான்சுவாவுக்குத் தெரியும். அவனுக்குத் தெரியுமென்று பக்குக்குத் தெரியும். அதனால் அது மீண்டும் நேரிடையாக அகப்பட்டுக் கொள்ளாதவாறு தந்திரமாக வேலை செய்தது. வண்டி இழுப்பதில் அது சற்றும் தவறு செய்யவில்லை. அந்த வேலையிலே அதற்குப் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், அது சாமர்த்தியமாக மற்ற நாய்களிடையே சண்டை மூட்டிவிட்டுத் திராஸ் வார்களில் சிக்கலுண்டாகும்படி செய்தது. டாக்கீனா ஆற்றின் முகத்துவாரத்தில் ஒருநாள் இரவு தங்கினார்கள். உணவு முடிந்தது. அந்தச் சமயத்தில் ஒரு வெண்மையான பனிமுயலைக் கண்டு டப் அதைப்பிடிக்க முயன்றது. ஆனால் பனிமுயல் அதன்பிடியில் அகப்படாமல் தப்பியோடிற்று. மறுகணத்தில் வண்டி நாய்களெல்லாம் அதைத் துரத்திக்கொண்டு பாய்ந்தன. வடமேற்குப்பிரதேச போலீஸ்காரர்கள் நூறு கஜத்திற்கு அப்பால் முகாமிட்டிருந்தார்கள். அவர்களிடம் ஐம்பது நாய்களிருந்தன. அவைகளும் வேட்டையில் கலந்துகொண்டன. ஆறு ஒடும் திசையிலேயே பனிமுயல் தாவியோடியது. பிறகு ஒரு சிறிய ஒடைப்பக்கம் திரும்பி அதன் மேல் படிந்திருந்த பனிக்கட்டியின் வழியாக ஓடிற்று. பனிப்பரப்பின் மீது ஓடுவது அதற்கு எளிதாக இருந்தது. ஆனால் அதைப்பிடிக்க வந்த நாய்களுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அறுபது நாய்களுக்கு முன்னால் பக் வேகமாக வந்தது. ஆனால் முயலை அணுக முடியவில்லை. தாவித் தாவி பக் பாய்ந்தது. மங்கிய நிலவின் வெண்ணொளியிலே அதன் கட்டான உடல் அழகாகத் தோற்றமளித்தது. ஏதோ ஒரு மூடுபனிக் குறளிபோலப் பனிமுயல் முன்னால் ஓடிற்று. பட்டணங்களைவிட்டுக் காட்டுக்குச்சென்று துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்து, விலங்குகளையும் பறவைகளையும் கொன்று குவிக்க வேண்டும் என்ற ரத்தவெறி மனிதனுக்குப் பல சமயங்களில் தோன்றுகின்றது. அது பழமையான இயல்பூக்கத்தின் வேகமாகும். அந்த வேகமே இன்னும் அதிகமான வலிமையோடு பக்கைப் பற்றிக் கொண்டிருந்தது. உயிரோடு முன்னால் செல்லும் அந்த இரையைத் தனது பற்களாலேயே கடித்துக் கொன்று